குமரியில் கொரோனாவில் இருந்து மீண்டவர் வீடு திரும்பினார் டாக்டர்கள், நர்சுகள் உற்சாகமாக கை தட்டி வழியனுப்பி வைத்தனர்
குமரியில் கொரோனாவில் இருந்து மீண்டவர் வீடு திரும்பினார். அவரை டாக்டர்களும், நர்சுகளும் உற்சாகமாக கைதட்டி வழியனுப்பி வைத்தனர்.
நாகர்கோவில்,
குமரியில் கொரோனாவில் இருந்து மீண்டவர் வீடு திரும்பினார். அவரை டாக்டர்களும், நர்சுகளும் உற்சாகமாக கைதட்டி வழியனுப்பி வைத்தனர்.
வீட்டுக்கு செல்ல மறுப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் 16 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை மற்றும் டென்னிசன் தெருவைச் சேர்ந்தவர்கள் 7 பேர், தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியை சேர்ந்த 3 பேர், மணிக்கட்டி பொட்டல் அனந்தசாமி புரத்தைச் சேர்ந்த 6 பேர் அடங்குவர்.
முதன் முதலில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவரான நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவருக்கு கொரோனா இல்லை என்பது 2 முறை நடந்த பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. அவருடைய குடும்பத்தினர் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் வீட்டுக்குச் செல்ல மறுத்து தொடர்ந்து ஆஸ்பத்திரியிலேயே இருந்து வருகிறார்.
தேங்காப்பட்டணம் நபர் குணமானார்
இதையடுத்து தேங்காப்பட்டணத்தை சேர்ந்த 2 பேரில் ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டார் என்பது கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த பரிசோதனையில் தெரிய வந்தது. பின்னர் 24 மணி நேரத்தில் செய்ய வேண்டிய மேலும் ஒரு பரிசோதனை நேற்று முன்தினம் நடந்தது. அதிலும் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியானது.
இதேபோல் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவரின் 88 வயது மூதாட்டிக்கு நேற்று முன்தினம் நடந்த பரிசோதனையில் அவர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 24 மணி நேரத்தில் மீண்டும் செய்ய வேண்டிய பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த பரிசோதனையில் நோய் தொற்று லேசாக இருப்பது தெரிய வந்தது. இவரும் முற்றிலும் குணம் அடைந்திருந்தால் வெள்ளாடிச்சிவிளையை சேர்ந்தவர், அவருடைய பாட்டி, தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் என 3 பேரையும் வீட்டுக்கு அனுப்பி வைக்க டாக்டர்கள் முடிவு செய்திருந்தனர்.
வழியனுப்பி வைத்தனர்
ஆனால் 88 வயது மூதாட்டி முழுமையாக குணமடையாததால் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்த அவருடைய பேரனும் வீட்டுக்குச் செல்ல விரும்பவில்லை. இதனால் தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியை சேர்ந்தவரை மட்டும் வீட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று மாலை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையம் அருகில் கொரோனாவில் இருந்து மீண்ட தேங்காப்பட்டணத்தை சேர்ந்தவரை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அவருக்கு டீன் சுகந்தி ராஜகுமாரி பழங்கள் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் டீன் ராதாகிருஷ்ணன், ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன் மற்றும் டாக்டர்கள், நர்சுகள், குணமடைந்த நோயாளியின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நன்றி தெரிவித்தார்
வழியனுப்பு நிகழ்ச்சியின்போது டாக்டர்களும், நர்சுகளும் கை தட்டி ஆரவாரம் செய்து, அவரை உற்சாகமாக வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். அவரும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். வீட்டுக்கு சென்றபிறகு 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுரை கூறினர். கொரோனாவில் இருந்து காப்பாற்றியதற்கு அவர் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
குமரி மாவட்டத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களில் முதன் முதலாக வீடு திரும்பியவர் இவர் தான் ஆவார். இவருடைய மனைவியும் இதே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story