ஓசூரில் இருந்து உரம் ஏற்றி வந்த லாரி பறிமுதல் ‘லிப்ட்’ கேட்டு வந்த வாலிபருடன் டிரைவர் சிக்கினார்


ஓசூரில் இருந்து உரம் ஏற்றி வந்த லாரி பறிமுதல் ‘லிப்ட்’ கேட்டு வந்த வாலிபருடன் டிரைவர் சிக்கினார்
x
தினத்தந்தி 23 April 2020 7:00 AM IST (Updated: 23 April 2020 7:00 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் இருந்து உரம் ஏற்றி வந்த லாரியை, ஆரல்வாய்மொழி சோதனை சாவடி பணியில் இருந்த போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆரல்வாய்மொழி,

ஓசூரில் இருந்து உரம் ஏற்றி வந்த லாரியை, ஆரல்வாய்மொழி சோதனை சாவடி பணியில் இருந்த போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ‘லிப்ட்‘ கேட்டு வந்த வாலிபருடன் டிரைவர் சிக்கினார்.

ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பரிதவிக்கும் ஊழியர்கள், தொழிலாளர்கள் எப்படியாவது சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்து, மோட்டார் சைக்கிள், கார், லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஊரடங்கை மீறி செல்லும் சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது.

அந்த வகையில், குமரி மாவட்டத்துக்கு வரும் நபர்கள் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் அதிகமாக சிக்கி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஓசூரில் இருந்து வந்த லாரி ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அந்த லாரியை மார்த்தாண்டம் மூலன் குழியை சேர்ந்த விஜயகுமார் (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார். மேலும் அதில், அருமனையை சேர்ந்த விஷ்ணு (22) என்பவரும் இருந்தார். விஷ்ணு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தொழில் விஷயமாக ஓசூர் பகுதிக்கு சென்ற போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அவர் அங்கு பரிதவித்து வந்துள்ளார். இதனையடுத்து குமரி மாவட்டத்துக்கு செல்லும் லாரியை அறிந்து அவர் ‘லிப்ட்‘ கேட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அனுமதியின்றி வந்ததால் அந்த லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் விஜயகுமார், விஷ்ணுவை மருத்துவ பரிசோதனை செய்ய முடிவெடுத்தனர். அதன்படி இருவருக்கும் டாக்டர் பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவர்களுக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை என தெரியவந்தது. எனினும் இருவரும் 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Next Story