பொட்டலம் போடும் பணியே இன்னும் முடியவில்லை: ரூ.500-க்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வாங்க வந்த மக்கள் ஏமாற்றம்
பொட்டலம் போடும் பணியே இன்னும் முடியாததால் ரேஷன் கடைகளுக்கு ரூ.500 மளிகை பொருட்கள் தொகுப்பை எதிர்பார்த்து வந்த மக்கள் ஏமாற்றத்துடன் வெறுங்கையுடன் திரும்பினர்.
திருச்சி,
பொட்டலம் போடும் பணியே இன்னும் முடியாததால் ரேஷன் கடைகளுக்கு ரூ.500 மளிகை பொருட்கள் தொகுப்பை எதிர்பார்த்து வந்த மக்கள் ஏமாற்றத்துடன் வெறுங்கையுடன் திரும்பினர்.
மளிகை பொருட்கள் தொகுப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கால கட்டத்தில் மக்கள் தேவை இல்லாமல் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கடை, கடையாக ஏறி இறங்குவதை தவிர்க்கும் நோக்கத்தில் தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலம் ரூ.500-க்கு 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் இந்த மளிகை பொருட்கள் தொகுப்பு ஏப்ரல் 22-ந்தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று திருச்சி நகரில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்படவில்லை.
மக்கள் ஏமாற்றம்
ஒரே இடத்தில் நியாயமான விலையில் உளுந்து, பருப்பு, வற்றல், மிளகு, எண்ணெய், உப்பு, சாம்பார்-மல்லி பொடிகள் உள்ளிட்ட மளிகை பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்து வெறுங்கையுடன் திரும்பினார்கள்.
இதுதொடர்பாக ரேஷன் கடைகளில் விசாரித்தபோது கூட்டுறவு துறையில் இருந்து எங்களுக்கு இன்னும் பொருட்கள் வந்து சேரவில்லை, தற்போது தான் மளிகை பொருட்களை பொட்டலம் போடும் பணி நடந்து வருவதாக அறிகிறோம். எங்களது கடைக்கு வந்து சேர்ந்த பின்னர் தான் அவற்றை வழங்க முடியும், என்றனர்.
பொட்டலம் போடும் பணி
இந்நிலையில் திருச்சி மெயின்கார்டு பகுதியில் உள்ள அமராவதி கூட்டுறவு அங்காடி வளாகத்தில் நேற்று வற்றல், உளுந்து, வெந்தயம், பருப்பு, சீரகம் உள்ளிட்ட பொருட்களை மூட்டைகளில் இருந்து பிரித்து எடுத்து தனித்தனி பாக்கெட்டுகளில் நிரப்பும் பணியில் பெண்கள் ஈடுபட்டு இருந்தனர். இந்த பணி முடிந்த பின்னர் தான் அனைத்து பொருட்களும் கொண்ட ஒரு தொகுப்பாக தயார் செய்யப்படும்.
தொகுப்பு தயாரிக்கப்பட்ட பின்னர் தான் அவை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே ரேஷன் கடைகளில் ரூ.500-க்கான மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்குவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் ஆகிவிடும் என தெரிகிறது.
இதுதொடர்பாக இந்த பணியில் ஈடுபட்டிருந்த சில தொழிலாளர்கள் கூறுகையில், சாம்பார் பொடி, மல்லி பொடி, உப்பு உள்ளிட்ட பொருட்களை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் மூட்டைகளில் இருந்து பிரித்து எடுத்து தனித்தனி பாக்கெட்டுகளில் அடைத்து அதன் பின்னர் தான் தனி பொட்டலமாக தயார் செய்ய வேண்டியது உள்ளது. எண்ணெய் பாக்கெட்டுகள் இன்னும் முழுமையாக வந்து சேரவில்லை. ஊரடங்கினால் பாக்கெட் போடுவதற்கு போதுமான ஆட்களும் கிடைப்பது இல்லை, என்றனர்.
Related Tags :
Next Story