செய்யாறு அருகே, சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா அறிகுறி - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


செய்யாறு அருகே, சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா அறிகுறி - ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 23 April 2020 4:15 AM IST (Updated: 23 April 2020 7:34 AM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அருகே சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா அறிகுறி உள்ளது. அவர், திருவண்ணாமலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

செய்யாறு, 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா முக்கூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் சுகாதார ஆய்வாளர் உள்பட சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு 20-ந்தேதி கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தநிலையில் சுகாதார ஆய்வாளர் வழக்கம்போல் முக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று காலை 11 மணியளவில் சளி, ரத்த மாதிரி பரிசோதனை முடிவில் சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பணியில் இருந்த சுகாதார ஆய்வாளரை திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுகாதார ஆய்வாளர் வசிக்கும் பகுதியான கீழ்மட்டை கிராமத்தில் உள்ள 7 தெருக்களுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, கிராமத்தைச் சுற்றி உள்ள 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆக்கூர் ஆரம்ப சுகாதார வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார ஆய்வாளரின் மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்பட உறவினர்கள் 8 பேரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறியுடன் இருக்கும் சுகாதார ஆய்வாளர், செய்யாறு மற்றும் அதைச் சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களை கண்காணிக்கும் பணியை மேற்கொண்டவர். கொரோனா தொற்று யாருக்கும் இல்லாத நிலையில் அவருக்கு எப்படி கொரோனா அறிகுறி வந்தது? எனக் கேள்வி எழுந்துள்ளது.

உடல் நலக்குறைவோ, பாதிப்போ வெளியே தெரியாத நிலையில் கொரோனா அறிகுறி உள்ளதால், சுகாதாரத் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று அறிகுறியால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார ஆய்வாளர் வருகிற 30-ந்தேதி பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story