திருவலம் அருகே, தோண்டி எடுக்கப்பட்ட 3 உடல்களும் ஒரே குழியில் புதைப்பு - உறவினர்கள் கதறல்
திருவலம் அருகே கொலை செய்யப்பட்ட 3 பேரின் பிணங்களும் தோண்டி எடுக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்து, ஒரே குழியில் புதைக்கப்பட்டது. வாகனங்களை திருடி விற்பதில் ஏற்பட்ட போட்டியால் கொன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுகுறித்து திருவலம் போலீசார் கூறியதாவது:-
திருவலம்,
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட்டை அடுத்த சீக்கராஜபுரம் அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக அதே பகுதியில் உள்ள மோட்டூரைச் சேர்ந்த யுவராஜ் (வயது 26), திருவலம் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (20), சீக்கராஜபுரம் பல்லவர்நகர் பகுதியைச் சேர்ந்த வாசு (20) ஆகிய 3 பேரை சிப்காட் போலீசார் கைது செய்தனர். ஜெயப்பிரகாஷ் என்பவர் தப்பியோடி விட்டார்.
3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள், தங்களின் கூட்டாளிகளான ஜெயப்பிரகாஷ், இளா என்கிற இளங்கோவன், சதீஷ், சூர்யா, சாரு ஆகிய 5 பேருடன் சேர்ந்து, சென்னையைச் சேர்ந்த ஆசிப் அகமது (26), திருக்கோவிலூர் தாலுகா தெளி பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (25), அதேபகுதியைச் சேர்ந்த சூர்யா (18) ஆகிய 3 பேரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருவலம் அருகே கம்பராஜபுரம் பனந்தோப்பில் வனத்துறையினருக்கு சொந்தமான இடத்தில் கொன்று புதைத்ததாகக் கூறினர்.
கைதான 3 பேர் மீது திருவலம் கிராம நிர்வாக அலுவலர் ஜோதீஸ்வரன் திருவலம் போலீசில் புகார் செய்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையில் ஈடுபட்ட மேலும் 5 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சென்னை திருவெற்றியூரைச் சேர்ந்த அண்ணன், தம்பியான சூர்யா (23), சதீஷ் (21) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் வாகனங்களை திருடி விற்பனை செய்யும் தொழில் போட்டியால் கொலைகளை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து சூர்யா, சதீஷ் ஆகியோரை திருவலம் அருகே உள்ள கம்பராஜபுரம் பனந்தோப்புக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
அங்கு, 3 பேரை கொலை செய்து பிணத்தைப் புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர். இதையடுத்து வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன், காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ், திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி, காட்பாடி தாசில்தார் பாலமுருகன், முன்னாள் தடயவியல் இணை இயக்குனர் பாரி மற்றும் வருவாய்த்துறை, போலீசார் முன்னிலையில் 3 பேரின் பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டது.
ஒரே குழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட ஆசிப் அகமது, நவீன்குமார், சூர்யா ஆகியோரின் பிணங்கள் அழுகிய நிலையில், துர்நாற்றம் வீசியது. உடல், மண்டை ஓடு, எலும்புகள் எனத் தனித்தனியாகக் கிடந்தன. கொலை செய்யப்பட்ட சூர்யா என்கிற மரியபாலனின் பிணத்தை அவருடைய பெற்றோர் ரக்ஷயதாஸ், சூசைமேரி ஆகியோர் அடையாளம் காட்டினர். மற்றொரு நபரான நவீன்குமார் பிணத்தை அவரின் மனைவி சூரியா, நவீன்குமாரின் தம்பி சகாயராஜ் ஆகியோர் அடையாளம் காட்டினர். ஆசிப்அகமது பிணத்தை அவரின் தாயார் மற்றும் உறவினர்கள் அடையாளம் காட்டினர். பிணங்களை அடையாளம் காட்டியபோது, கொலை செய்யப்பட்ட 3 பேரின் உறவினர்களும் கதறி அழுதனர்.
தோண்டி எடுக்கப்பட்ட 3 பேரின் பிணங்களும் வேலூர் தடய அறிவியல் துறை அலுவலர் டாக்டர் சொக்கநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர். பின்னர் 3 பேரின் பிணங்களும் அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. திருவலம் அருகே 3 பேரை கொலை செய்து ஒரே குழியில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story