3 சரக்கு ரெயில்களை ஒன்றாக இணைத்து 126 பெட்டிகளுடன் வந்த ‘அனகோண்டா’ சிறப்பு ரெயில் - நேரத்தை மிச்சப்படுத்த புதிய நடவடிக்கை
ஈரோட்டில் இருந்து ரேணிகுண்டாவுக்கு அனகோண்டா என பெயரிட்ட 3 சரக்கு ரெயில்கள் ஒன்றாக இணைத்து இயக்கப்பட்டது. நேரத்தை மிச்சப்படுத்த தென்னக ரெயில்வே புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜோலார்பேட்டை,
ஈரோட்டில் இருந்து நேற்று அதிகாலை ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு 3 சரக்கு ரெயில்களை ஒன்றாக இணைத்து அனகோண்டா சிறப்பு சரக்கு ரெயில் இயக்கப்பட்டது. அந்த ரெயில் சேலம் வழியாக வந்து நேற்று பகல் 10.50 மணியளவில் ஜோலார்பேட்டையை வந்தடைந்தது. அங்கு, அனகோண்டா சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது. அந்த ரெயிலை ஓட்டி வந்த 3 என்ஜின் டிரைவர்கள் மாற்றப்பட்டனர்.
இதையடுத்து ஜோலார்பேட்டையில் பணிபுரியும் ரெயில் என்ஜின் டிரைவர்களான முருகானந்தம், பாலசுந்தர், தீபக் ஆகியோரும், 3 கார்டுகள் என 6 பேரை ரெயில்வே நிர்வாகம் ‘அனகோண்டா’ சிறப்பு சரக்கு ரெயிலில் பணியமர்த்தியது. அனகோண்டா சிறப்பு சரக்கு ரெயில் ஜோலார்பேட்டையில் இருந்து நேற்று பகல் 11 மணியளவில் புறப்பட்டு காட்பாடி வழியாக ரேணிகுண்டாவை நோக்கி சென்றது.
‘அனகோண்டா’ சிறப்பு சரக்கு ரெயிலில் முதலில் 2 என்ஜின்கள், அதனுடன் 42 பெட்டிகள், 1 கார்டு பெட்டி இணைப்பட்டிருந்தன. அதன் பிறகு 1 என்ஜின், 42 சரக்கு ரெயில் பெட்டிகள், அதனுடன் 1 கார்டு பெட்டி இணைக்கப்பட்டிருந்தன. அதைத்தொடர்ந்து 1 என்ஜின், 42 சரக்கு ரெயில் பெட்டிகள், இறுதியாக 1 கார்டு பெட்டி சேர்க்கப்பட்டிருந்தது. ஆக மொத்தம் 126 பெட்டிகள், 4 என்ஜின்கள், 3 கார்டு பெட்டிகள் மிக நீண்ட சரக்கு ரெயிலாக இயக்கப்பட்டது.
‘அனகோண்டா’ சிறப்பு சரக்கு ரெயில் பகல் 11 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணியளவில் ரேணிகுண்டா ரெயில் நிலையத்தை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 379 கிலோ மீட்டர் பயணித்த ‘அனகோண்டா’ சிறப்பு சரக்கு ரெயில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது குறிப்பிடத்தக்கது. நேரத்தை மிச்சப்படுத்த தென்னக ரெயில்வே மேற்கண்ட ஏற்பாடுகளை செய்து, புதிய சாதனையை படைத்துள்ளது.
Related Tags :
Next Story