திருச்சியில் ரூ.10 கோடி மதுபாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்துக்கு ‘சீல்’


திருச்சியில் ரூ.10 கோடி மதுபாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்துக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 23 April 2020 7:58 AM IST (Updated: 23 April 2020 7:58 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ரூ.10 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

திருச்சி, 

திருச்சியில் ரூ.10 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

டாஸ்மாக் கடைகள் மூடல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாநகரத்துக்குட்பட்ட உறையூர் கோணக்கரைரோடு, வரகனேரி பிச்சைநகர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் கடைகளில் பூட்டை உடைத்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். ஊரடங்கை பயன்படுத்தி சமூக விரோத கும்பல் டாஸ்மாக் கடைகளில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

இதனால், டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் அப்புறப்படுத்தப்பட்டு திருச்சி தேவர்ஹால் அரங்கத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

ரூ.10 கோடி மதிப்பு

இதேபோல் மாநகரில் செயல்பட்டு வரும் 56 டாஸ்மாக் கடைகளில் இருந்து ரூ.10 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுபாட்டில்கள் அனைத்தையும் வைக்கும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று மாலை டாஸ்மாக் மாவட்ட மேலாளர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகள் திருமண மண்டபத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதையடுத்து திருமண மண்டபம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story