வங்கியில் முக கவசம் அணியாமல் பணி செய்த ஊழியர் கைது - சப்-கலெக்டர் அதிரடி நடவடிக்கை


வங்கியில் முக கவசம் அணியாமல் பணி செய்த ஊழியர் கைது - சப்-கலெக்டர் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 23 April 2020 3:30 AM IST (Updated: 23 April 2020 8:22 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் முக கவசம் அணியாமல் பணி செய்த ஊழியரை சப்-கலெக்டர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் வங்கிகள் செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டது. அதன்படி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்திலும் வங்கிகள் இயங்கி வருகின்றன. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் முக கவசம் அணிந்தே பணி செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில், நேற்று பெண்ணாடத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்வதற்காக விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார் நேரில் சென்றார். அப்போது, அங்கு இயங்கிய ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் உள்ளே சென்ற அவர், அங்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறார்களா என்று பார்வையிட்டார்.

அப்போது அங்கிருந்த வங்கியின் எழுத்தர் வெங்கடேசன்(வயது 31) முக கவசம் அணியாமல் பணி செய்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த சப்-கலெக்டர் பிரவீன்குமார், அவரிடம் சென்று ஏன் முக கவசம் அணியவில்லை? என்று கேட்டார். பின்னர் முக கவசம் அணிய வேண்டியதின் அவசியம் குறித்தும் விளக்கினார்.

இதற்கிடையே, பொதுமக்கள் வந்துசெல்லும் வங்கியில், முக கவசம் அணியாமல் பணி செய்ததற்காக அவரை பிடித்து பெண்ணாடம் போலீசில் சப்-கலெக்டர் ஒப்படைத்தார். பொதுமக்களுக்கு நோயை பரப்பும் வகையில் பணி செய்ததாக கூறி அவர் மீது பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.

Next Story