டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து அரசு டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்


டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததை கண்டித்து அரசு டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்
x
தினத்தந்தி 23 April 2020 9:15 AM IST (Updated: 23 April 2020 9:15 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து பணி புரிந்தனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து பணி புரிந்தனர். மேலும் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இரவில் டாக்டர்கள் தங்களது வீடுகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றனர்.

கொரோனாவால் உயிரிழந்த டாக்டர்

சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த 55 வயதான டாக்டர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை ஆம்புலன்சில் டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள கல்லறைக்கு கொண்டு சென்ற போது, அந்தப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கிருந்து அண்ணாநகர் வேலங்காடு கல்லறைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு உடலை புதைக்க அந்த பகுதி மக்கள் ஆம்புலன்சு மீது கல்வீசி தாக்கி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டாக்டரின் உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது. இதற்கு முன் கொரோனா தொற்றால் இறந்த ஆந்திர மாநில டாக்டர் ஒருவரின் உடலை எரிக்க அம்பத்தூர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து...

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்கியதால் வீரமரணம் அடைந்த, டாக்டர்களின் உடல்களை கவுரவமான முறையில் எரியூட்டவோ அல்லது அடக்கம் செய்யவோ முடியவில்லை. தமிழகத்தில் இந்த அவல நிலை ஏற்பட்டதை கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் நேற்று கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர். மேலும் டாக்டர்களை பாதுகாக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதனை வலியுறுத்தி நேற்று இரவு 9 மணிக்கு டாக்டர்கள் தங்களது வீடுகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றனர். டாக்டர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றனர்.

Next Story