கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சாலைகளில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதிகாரிகள்


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சாலைகளில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதிகாரிகள்
x
தினத்தந்தி 23 April 2020 4:15 AM IST (Updated: 23 April 2020 9:29 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சாலைகளில் ஓவியம் வரைந்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கூடலூர், 

உலக மக்களை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வரலாம் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் அலட்சியத்துடன் சிலர் சாலைகளில் வீணாக நடந்து செல்கின்றனர். இதனால் அவர்களிடமும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நீலகிரி மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் உள்ள சாலைகளில் பல்வேறு துறை அதிகாரிகள் ஓவியம் வரைந்து வருகின்றனர்.

கூடலூர் நகராட்சி பகுதியில் தலைமை தபால் அலுவலகம், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் நகராட்சி அதிகாரிகள், போலீசார் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வைத்து உள்ளனர். இதேபோன்று ஒவியர்கள் சங்கம் சார்பிலும் ரத்தத்தை குடிக்கும் கொரோனா வைரஸ் என்பது போல் சித்தரித்து ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வரையப்பட்ட ஓவியங்களை கண்டு விழிப்புணர்வு அடைகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் கூறியதாவது:-

தொடுவதன் மூலம் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இதனால் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும். சில மீட்டர் தூரம் தள்ளி நின்று பேச வேண்டும். மளிகை, காய்கறி கடைகளில் பொருட்கள் வாங்கும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இதை உணர்த்துவதற்காக மக்கள் அதிகம் நடமாடும் சாலைகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஒவியங்கள் வரையப்பட்டு வருகிறது.குழந்தைகள், முதியவர்கள் வெளியில் நடமாடக்கூடாது. தேவை இல்லாமல் வாகனங்களில் சுற்றினாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதேபோன்று பந்தலூர் நெல்லியாளம் நகராட்சி பகுதியிலும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஒவியங்கள் பல்வேறு அமைப்பினரால் வரையப்பட்டு உள்ளது. மஞ்சூர் தாலுகா பகுதியிலும் போலீசார் பல இடங்களிலும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு படங்களை வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Next Story