வாரத்தில் 3 நாட்கள் கடைகள் திறப்பு முறை அமல்: விழுப்புரம் நகர மக்கள் விதிகளை பின்பற்றுகிறார்களா? போலீசார் தீவிர கண்காணிப்பு


வாரத்தில் 3 நாட்கள் கடைகள் திறப்பு முறை அமல்: விழுப்புரம் நகர மக்கள் விதிகளை பின்பற்றுகிறார்களா? போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 23 April 2020 3:45 AM IST (Updated: 23 April 2020 9:29 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் நகரில் வாரத்தில் 3 நாட்கள் கடைகள் திறப்பு முறை அமலுக்கு வந்ததையடுத்து பொதுமக்கள் விதிகளை பின்பற்றுகிறார்களா? என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா நோய் தொற்றினால் 40 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 30 பேர் விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.விழுப்புரம் நகரில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தாக்கம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே வாரத்திற்கு ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு நபர் அதுவும் ஒருமுறை மட்டுமே வீட்டை விட்டு வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு அதற்கான அனுமதி சீட்டுகளையும் வழங்கியது.

இந்த நடைமுறை அமலில் இருந்து வருகிற நிலையிலும் நகரில் பொதுமக்களின் நடமாட்டம் இன்னும் குறையவில்லை. ஒவ்வொரு நாளும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்களின் வாகனத்தில் போலீசார், அடையாளத்திற்காக பெயிண்ட் அடித்தாலும் அதை அழித்துவிட்டு மீண்டும், மீண்டும் உலா வருகின்றனர்.இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம், காவல்துறையின் அறிவுறுத்தலின்படி விழுப்புரம் நகரில் வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய 3 நாட்கள் மட்டுமே அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களின் கடைகள் திறந்திருக்கும் என்றும் மற்ற 4 நாட்கள் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்று வணிகர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

மேலும் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி சீட்டுகள் (திங்கள், செவ்வாய் கார்டுதாரர்கள்) திங்கட்கிழமையன்றும், (புதன், வியாழன் கார்டுதாரர்கள்) புதன்கிழமையன்றும், (வெள்ளி, சனி கார்டுதாரர்கள்) சனிக்கிழமையன்றும் கடைகளுக்கு வந்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுச்செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நடைமுறை நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த நடைமுறைப்படி அதாவது நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ள புதன், வியாழன் அனுமதி சீட்டுதாரர்கள் மட்டும்தான் கடைக்கு வருகிறார்களா? என்பதை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.பொதுமக்கள் ஒவ்வொருவரையும் நிறுத்தி அனுமதி சீட்டு வைத்துள்ளனரா? என்றும் விதிகளை பின்பற்றிதான் வெளியே வருகிறார்களா? என்றும் போலீசார் தீவிர சோதனை செய்ததோடு அவர்களது வாகனங்களில் பெயிண்ட் அடித்தனர். மேலும் இந்த பெயிண்டை யாரேனும் அழித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர். அதே சமயத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளிலும் பொதுமக்கள் 1 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்குகிறார்களா? என்பதையும் போலீசார் கண்காணித்துவருகின்றனர்.

Next Story