ஊரடங்கால் விற்பனை குறைந்ததால் தோட்டங்களுக்கு உரமாகும் பூக்கள்


ஊரடங்கால் விற்பனை குறைந்ததால் தோட்டங்களுக்கு உரமாகும் பூக்கள்
x
தினத்தந்தி 23 April 2020 11:03 AM IST (Updated: 23 April 2020 11:03 AM IST)
t-max-icont-min-icon

கீரமங்கலத்தில், ஊரடங்கால் விற்பனை குறைந்ததால், வியாபாரிகள் பூக்களை தோட்டங்களில் உரமாக கொட்டி வருகின்றனர்.

கீரமங்கலம், 

கீரமங்கலத்தில், ஊரடங்கால் விற்பனை குறைந்ததால், வியாபாரிகள் பூக்களை தோட்டங்களில் உரமாக கொட்டி வருகின்றனர்.

பூக்கள் உற்பத்தி

தமிழ்நாட்டில் மதுரை, திருச்சிக்கு அடுத்தபடியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் மலர் சந்தை பெரிய சந்தையாக உள்ளது. அதாவது கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், வடகாடு, மாங்காடு, மழையூர், வம்பன், திருவரங்குளம் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூக்கள் உற்பத்தி தான் பிரதானமாக உள்ளது.

இந்த பகுதிகளில் இருந்து மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, ரோஜா, செண்டு, கோழிக்கொண்டை, வாடாமல்லி என ஒரு நாளைக்கு சுமார் 15 டன் வரை கீரமங்கலம் மலர் கமிஷன் கடைகள் மூலம் பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பல மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் வந்து பூக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

தோட்டங்களில் உரமாகும் பூக்கள்

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பூக்கள் பறிக்கப்படாமல் செடிகளிலேயே வீணாகி கொட்டுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் பூக்களை பறிக்கவும், அதை விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மூலம் பூக்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், விற்பனை செய்ய முடியாத பூக்களை ஆலங்குடியில் உள்ள குளிர்பதன கிடங்கில் வாடகை இல்லாமல் வைத்துக் கொள்ளவும் உத்தரவிட்டார்.

அதன்பிறகு கடந்த ஒரு வாரமாக குறைந்தஅளவு பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வியாபாரிகள் வரவில்லை. இதனால் விற்பனை செய்யும் பூக்கள்போக, மீதி உள்ள பூக்களை வியாபாரிகள் தங்கள் தோட்டங் களில் கொட்டி உரமாக்கி வருகிறார்கள்.

நறுமண தொழிற்சாலை

இதுகுறித்து, கீரமங்கலம் பூ கமிஷன் கடை உரிமையாளர் ராஜேந்திரன் கூறுகையில், விவசாயிகள் கொண்டு வரும் பூக்களை வாங்கிக்கொண்டு பூ பறிக்கும் செலவுக்காக பணம் கொடுத்து வந்தோம். ஆனால் அந்த பணத்திற்கு கூட பூக்களை விற்பனை செய்ய முடியவில்லை. வெளியூர் வியாபாரிகளும் பூக்கள் வாங்க வரவில்லை. விவசாயிகள் அன்றாட செலவினங்களுக்கே தடுமாறுவதால், அவர்கள் கொண்டு வரும் பூக்களை வாங்கி தோட்டங்களில் கொட்டி, வியாபாரிகளும் நஷ்டமடைந்து வருகிறோம்.

கீரமங்கலம் பகுதியில் ஒரு நறுமண தொழிற்சாலை அமைத்திருந்தால் இதுபோன்ற காலங்களில் விவசாயிகள் இழப்பு இல்லாமல் வாழ முடியும். இந்த கோரிக்கை சுமார் 20 வருடங்களாக வைக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. எனவே விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திக்கு ஏற்ப அரசு நிவாரணம் வழங்கினால் கடனில் இருந்து மீள முடியும் என்றார்.

Next Story