நெல்லை டவுனில் காய்கறி கடைகளில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு புதிதாக தற்காலிக கடைகள் திறப்பு


நெல்லை டவுனில் காய்கறி கடைகளில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு புதிதாக தற்காலிக கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 23 April 2020 12:12 PM IST (Updated: 23 April 2020 12:12 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுனில் உள்ள காய்கறி கடைகளில் நேற்று கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் புதிதாக தற்காலிக காய்கறி கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

நெல்லை, 

நெல்லை டவுனில் உள்ள காய்கறி கடைகளில் நேற்று கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும் புதிதாக தற்காலிக காய்கறி கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

தற்காலிக காய்கறி கடைகள்

நெல்லை மாநகர பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையொட்டி, அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தங்கு தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 14 இடங்களில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து காய்கறிகளை வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சில காய்கறி கடைகளில் பொதுமக்கள் கூட்டமாக நின்று காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள்.

இதை தவிர்க்கும் வகையில் புதிய தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நெல்லை டவுன் ஆர்ச்சில் இருந்து அருணாகிரி தியேட்டர் செல்லும் சாலையில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு நின்று காய்கறிகளை வாங்கி சென்றனர்.

கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி மற்றும் பொருட்காட்சி திடலில் உள்ள காய்கறி கடைகளில் மாவட்ட கலெக்டர் ஷில்பாவால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். இந்த குழுவில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சண்முகநாதன், வேளாண்மை அலுவலர் மாரியப்பன், கண்டியப்பேரி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன், உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரநாராயணன், தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் ரத்னா, பாளையங்கோட்டை உதவி தோட்டக்கலை அலுவலர் கமலேஷ் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

அவர்கள் ஒவ்வொரு கடையாக சென்று ஆய்வு செய்தனர். கடைகளில் விலைப்பட்டியல் வைக்கப்பட்டு உள்ளதா? சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அந்த குழுவினர் காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் செல்வக்குமார், நிர்வாகி செல்வராஜ் ஆகியோரிடம் கலந்து பேசினர். காய்கறிகள் தங்கு தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள், வியாபாரிகளிடம் வலியுறுத்தினர்.

இதேபோல் பாளையங்கோட்டை மகராஜநகர் பகுதியில் உள்ள உழவர் சந்தை கடைகளில், உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம், உழவர் சந்தை அதிகாரி ஆனந்தகுமார், உதவி அலுவலர் திருமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு வந்தவர்களிடம் அனுமதி அட்டை உள்ளதா? முககவசம் அணிந்து வருகின்றனரா? என்பதை கண்காணித்தனர்.

இரும்பு தடுப்புகள்

நெல்லை டவுன் ரதவீதியை சுற்றி உள்ள மொத்த வியாபார கடைகளில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த வியாபாரிகள் வந்து பொருட்கள் வாங்கி செல்வார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தடுக்க நெல்லை டவுன் ரத வீதிகளில் முக்கிய இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதை கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து ஒரு சில இடங்களில் உள்ள இரும்பு தடுப்புகளை அகற்றினர். நேற்று மீண்டும் முக்கிய இடங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டன.

Next Story