போதிய விலை கிடைக்காததால் அறுவடை செய்யாமல் கிடக்கும் முட்டைகோஸ்கள் - விவசாயிகள் கவலை


போதிய விலை கிடைக்காததால் அறுவடை செய்யாமல் கிடக்கும் முட்டைகோஸ்கள் - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 23 April 2020 12:47 PM IST (Updated: 23 April 2020 12:47 PM IST)
t-max-icont-min-icon

போதிய விலை கிடைக்காததால், அறுவடை செய்யாமல் கிடக்கும் முட்டைகோஸ்களை பார்த்து விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

கோவை,

கோவை மாவட்டத்தில் ஆலாந்துறை, நரசீபுரம், செம்மேடு, வெள்ளியங்காடு, மேட்டுப்பாளையம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் 1,500 ஏக்கரில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது முட்டைகோஸ் அறுவடை செய்யும் நேரம் ஆகும்.

அறுவடை நேரத்தில் வியாபாரிகள் தோட்டங்களுக்கு சென்று முட்டைகோசை வாங்கிச்செல்வார்கள். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு என்பதால், வியாபாரிகள் அதிகம் வருவது இல்லை. இதனால் அறுவடை செய்த முட்டைகோசை விற்பனை செய்ய முடியவில்லை.

அத்துடன் போதிய விலையும் கிடைப்பது இல்லை. எனவே அறுவடை செய்த முட்டைகோசை மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். சில இடங்களில் விவசாயிகள் விளைந்த நிலையில் இருக்கும் முட்டைகோசை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டு உள்ளனர்.

எனவே விவசாயிகள் போதிய விலை கிடைக்காமலும், அறுவடை செய்ததை விற்பனை செய்ய முடியாமலும் கவலையடைந்து உள்ளனர். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி மற்றும் விவசாயிகள் கூறியதாவது:-

மலைப்பகுதியில்தான் முட்டைகோஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்படும். ஆனால் கோவை மாவட்டத்தில் உள்ள மலையடிவார பகுதியில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. 3 மாத பயிரான முட்டைகோசை நவம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை சாகுபடி செய்வார்கள். சாகுபடியில் இருந்து அறுவடை வரை ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவு ஆகும்.

தற்போது அறுவடைக்கு தயாரான நேரம் ஆகும். கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் நேரடியாக விவசாய தோட்டங்களுக்கு வந்து முட்டைகோசை வாங்கிச்செல்வார்கள். ஆனால் தற்போது சில வியாபாரிகள்தான் வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் கிலோ ரூ.10-க்கும் மேல் விவசாயிகளிடம் இருந்து வாங்கினார்கள். ஆனால் தற்போது அதிகபட்சமாக ரூ.7 தான் கிலோவுக்கு கொடுக்கிறார்கள். நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 12 டன் கிடைக்கும். ஆனால் போதிய விலை இல்லாததால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

மலைக்கிராமத்தில் இருந்து உழவர் சந்தைக்கு முட்டைகோசை கொண்டுவர விவசாயிகளுக்கு போதிய வசதி இல்லாததால் கொண்டுவர முடியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து முட்டைகோஸ் விவசாயிகளுக்கு போதிய விலைகிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story