கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு: மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வழங்கவேண்டும் - அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை


கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு: மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வழங்கவேண்டும் - அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 April 2020 2:09 PM IST (Updated: 23 April 2020 2:09 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அரியாங்குப்பம், 

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் தினக்கூலி தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்கள், கடைகளில் பணியாற்றுபவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். கடந்த 20-ந் தேதி ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையிலும் தொழிற்சாலைகள் முழுமையாக செயல்படவில்லை.

மீன்பிடி தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், புதுவை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருப்பதால் அவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீனவர் கிராமங்களின் கடற்கரையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தடைக்காலத்தை பயன்படுத்தி வீராம்பட்டினம் மீனவர்கள் தங்களது படகுகள், மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விசைப்படகுகள், பைபர் படகுகள் தவிர கட்டுமர மீனவர்கள் மட்டும் கடலில் சிறிது தூரத்துக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். குறைந்த அளவிலான மீன்களே பிடிபடுவதால், போதிய வருமானம் கிடைப்பதில்லையாம்.

ஏற்கனவே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு காரணமாக மீன்பிடிப்பதற்கு செல்லாத நிலையில், மீன்பிடி தடைகாலத்தால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மீன்பிடி தடைகாலத்தை குறைத்து, நிவாரண உதவித்தொகையாக குடும்பங்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வழங்கவேண்டும் என்று அரசுக்கு வீராம்பட்டினம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story