நகராட்சி அதிகாரிகள் அதிரடி முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூல்


நகராட்சி அதிகாரிகள் அதிரடி முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 23 April 2020 2:09 PM IST (Updated: 23 April 2020 2:09 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் முககவசம் அணியாதவர்களிடம் நகராட்சி அதிகாரிகள், போலீசார் அதிரடியாக அபராதம் வசூலித்தனர்.

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் புதுவையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். அப்போது கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். இருந்தபோதிலும் ஒரு சிலர் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிந்தனர்.

இதற்கிடையில் ஊரடங்கை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க உழவர்கரை, புதுச்சேரி நகராட்சிகளில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முக கவசம் அணியாமல் வந்தவர்களை இந்திரா காந்தி சிலை அருகே உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையிலான அதிகாரிகளும், போலீசாரும் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். 142 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக வசூலிக்கப்பட்டது.

புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையில் அதிகாரிகளும் முககவசம் அணியாமல் வந்த 58 பேரிடம் தலா ரூ.100 அபராதம் வசூலித்தனர்.

தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் மேற்பார்வையில், கிருமாம்பாக்கத்தில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி ஆகியோர் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம், அரியாங்குப்பம் பகுதியில் நேற்று ஒரே நாளில் முககவசம் அணியாமல் வந்த 60 பேரிடம் தலா ரூ.100 என மொத்தம் ரூ.6 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. இதேபோல் ஒவ்வொரு போலீஸ் நிலையம் மற்றும் வருவாய்த்துறை சார்பிலும் அதிரடியாக அபராதம் வசூலிக்கப்பட்டது.

Next Story