ஆத்தூரில் பரிதாபம்: என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஆத்தூரில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகநேரி,
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவர் ஏரல் அரசு நூலகத்தில் நூலகராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தெய்வநாயகி. இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் குரு பிரசாத் (வயது 20), நெல்லையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் குரு பிரசாத் தனது வீட்டில் இருந்தார். நேற்று மதியம் வீட்டில் அனைவரும் டி.வி. பார்த்து கொண்டிருந்தனர். அப்போது குரு பிரசாத்திடம் நன்றாக படிக்குமாறும், கல்லூரி திறந்ததும் பெயிலான பாடங்களை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுமாறும் தந்தை பாபு அறிவுரை வழங்கி கண்டித்தார்.
தற்கொலை
இதனால் மனமுடைந்த குரு பிரசாத் தனது அறையில் சென்று மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் நீண்ட நேரமாகியும் குரு பிரசாத் தனது அறையில் இருந்து வெளியே வராததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து, கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அப்போது குரு பிரசாத் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று, குரு பிரசாத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றாக படிக்குமாறு தந்தை கண்டித்ததால், என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story