அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகத்தில் ஏழைகளுக்கு இலவச உணவு - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகத்தில் ஏழைகளுக்கு இலவச உணவு - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 April 2020 4:30 AM IST (Updated: 23 April 2020 11:06 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகத்தில் ஏழைகளுக்கு தினமும் 3 வேளை இலவச உணவு வழங்குவதை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவிடும் வகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கோவில்பட்டி பார்க் ரோடு நகரசபை அலுவலகம் அருகில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று முதல் வருகிற 3–ந்தேதி வரையிலும் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் தலா 1,000 பேருக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது.

இதையொட்டி அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து முதற்கட்டமாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் ராஜாராமிடம் வழங்கினார். தொடர்ந்து அவர், அம்மா உணவகத்தில் ஏழைகளுக்கு உணவு பொட்டலம் வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் அலுவலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 416 ஆட்டோ டிரைவர்களுக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கொரோனா பாதிப்பு இல்லாத நிலை 


தூத்துக்குடி மாவட்டத்தில் 2,364 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், 27 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்து விட்டார். 19 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 5 பேரும், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசின் வழிகாட்டுதல்படி, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளால், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதேபோன்று தொடர்ந்து மக்கள் சுய ஊரடங்கை கடைபிடித்து முழுமையாக ஒத்துழைத்தால், இன்னும் சில நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க முடியும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., தாசில்தார் மணிகண்டன், நகரசபை என்ஜினீயர் கோவிந்தராஜ், சுகாதார அலுவலர் இளங்கோ, மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, கோவில்பட்டி யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், யூனியன் துணை தலைவர் பழனிசாமி, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று மதியம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள அம்மா உணவகத்துக்கு வந்தார். அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு மதிய உணவை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் வி.பி.ஜெயசீலன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி 


தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி மாநகராட்சியில் இயங்கும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வினியோகம் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள அம்மா உணவகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் தலைமை தாங்கி இலவச உணவு வினியோகத்தை தொடங்கி வைத்தார். மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

அதே போன்று புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கி தொடங்கி வைத்தார். 1–ம் கேட் சத்திரம் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வக்குமார், ஸ்டேட் வங்கி காலனி அம்மா உணவகத்தில் பகுதி செயலாளர் பொன்ராஜ், வி.வி.டி. பூங்கா அருகில் உள்ள அம்மா உணவகத்தில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் வீரபாகு ஆகியோர் தலைமை தாங்கி இலவச உணவு வினியோகத்தை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி பொறியாளர் சரவணன், மண்டல உதவி ஆணையர்கள் சந்திரமோகன், தனசிங், காந்திமதி, ராமச்சந்திரன், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் பிரின்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story