புளியங்குடியில் சுகாதார பணிகள் தீவிரம்
புளியங்குடி பகுதியில் சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
புளியங்குடி,
தென்காசி மாவட்டத்தில் புளியங்குடி பகுதியில் கொரோனாவுக்கு இதுவரை 29 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருந்ததால் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. புளியங்குடி ஊருக்குள் செல்லும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
புளியங்குடியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நவீன எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியும், 2 மையங்களில் தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புளியங்குடி நகரசபை ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் தினந்தோறும் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆகியோர் மேற்பார்வையில் காவல்துறையினர், நகரசபை அதிகாரிகள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறையினரின் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை காரணமாக கடந்த 2 நாட்களாக வைரஸ் பரவும் வேகம் குறைந்து வருகிறது. இது பொதுமக்களிடையே இருந்த பயத்தை போக்கி நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
தீவிர கண்காணிப்பு
புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர்கள் அலெக்ஸ் ராஜ், ஆடிவேல் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தாசில்தார் அழப்பராஜா, நகரசபை கமிஷனர் குமார்சிங், பொறியாளர் சுரேஷ், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன், தூய்மை இந்தியா மேற்பார்வையாளர் விஜயராணி மற்றும் சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், நகரின் அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிப்பது போன்ற தீவிர சுகாதார பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தினமும் நோய் தொற்று குறித்து பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று 205 பேருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
புளியங்குடி சிந்தாமணியில் சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசாருக்கு அவர்களின் பணியை பாராட்டி ‘கேக்‘ வழங்கப்பட்டது. அதே நேரத்தில், பொதுமக்கள் தொடர்ந்து வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க தன்னார்வ தொண்டர்கள் நகர் முழுவதும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
Related Tags :
Next Story