கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்: நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 20 பேர் ‘டிஸ்சார்ஜ்’
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 20 பேர் நேற்று ஒரே நாளில் ‘டிஸ்சார்ஜ்‘ ஆனார்கள். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 9 பேரும் குணமடைந்தனர்.
நெல்லை,
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் ஏற்கனவே 62 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் படிப்படியாக 35 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர். இந்த நிலையில் நேற்று மேலும் 20 பேர் பூரண குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்‘ ஆனார்கள். இவர்களில் 10 பெண்கள் உள்பட 16 பேர் மேலப்பாளையத்தை சேர்ந்தவர்கள். மேலும் களக்காட்டை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேரும், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனாரூத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் அடங்குவர்.
நேற்று மாலையில் 20 பேரையும் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன் தலைமையில் டாக்டர்கள் கலந்து கொண்டு, கைதட்டி மகிழ்ச்சியுடன் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-
தாக்கம் குறைந்து வருகிறது
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பாதித்த பகுதிகளான மேலப்பாளையம், என்.ஜி.ஓ. காலனி, நெல்லை டவுன், கோடீசுவரன் நகர், பேட்டை, பாளையங்கோட்டை கே.டி.சி. நகர், டார்லிங் நகர், களக்காடு, பத்தமடை ஆகிய 9 இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கு தினமும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தகைய தொடர் நடவடிக்கையால் நெல்லையில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. தற்போது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறவர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். பொதுமக்கள் அரசு அறிவுரைகளை கடைபிடித்து கை, கால்களை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வீட்டில் இருந்து ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடியில்...
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் இதுவரை 27 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 5 பேரும், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 22 பேரும் சிகிச்சை பெற்றனர். இதில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த ஒரு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்த நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த தூத்துக்குடியை சேர்ந்த 5 பேர், பேட்மாநகரத்தை சேர்ந்த 2 பேர், தங்கம்மாள்புரம், ஆத்தூரை சேர்ந்த தலா ஒருவர் ஆக மொத்தம் 9 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் 5 பெண்கள், 2 ஆண்கள், 2 சிறுவர்கள் உள்ளனர். அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் கலந்து கொண்டு, குணமடைந்தவர்களுக்கு பழங்களை வழங்கி கைதட்டி வழியனுப்பி வைத்தனர்.
நல்ல சிகிச்சை
இதேபோல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளான 5 பேர் தூத்துக்குடியிலும், 2 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் ஆக மொத்தம் 7 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் கூறுகையில், “கொரோனா நோய் பாதிப்பு பெரிய விஷயம் அல்ல. பாதிக்கப்பட்டவர்களை மற்ற மனிதர்கள் சகஜமாக நடத்த வேண்டும். அவர்களிடம் பாரபட்சம் காட்ட வேண்டாம். மனதைரியத்துடன் எதிர்கொண்டால் கொரோனா நோயில் இருந்து எளிதில் மீளலாம். ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்தவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வீட்டில் இருப்பதை போன்று உணர்ந்தோம். டாக்டர்களின் கனிவான உபசரிப்பு மூலம் நாங்கள் விரைவில் குணமடைய முடிந்தது“ என்றார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், அரசு ஆஸ்பத்திரி டீன் திருவாசகமணி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணலீலா, உறைவிட மருத்துவர் சைலஸ்ஜெயமணி, கொரோனா ஒருங்கிணைப்பு அலுவலர் இளங்கோ மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் 2 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கும், தென்காசி மாவட்டத்தில் ஒருவருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நெல்லையில் பாதிக்கப்பட்டவர், மேலப்பாளையத்தை சேர்ந்த 20 வயது வாலிபர். தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர், புளியங்குடி பகுதியை சேர்ந்தவர். தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 31 பேர் ஏற்கனவே நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பாதிக்கப்பட்ட ஒருவருடன் சேர்த்து மொத்தம் 32 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story