உடுமலையில் உலக புத்தக தினத்தையொட்டி மாணவர்களுக்கு செல்போன் மூலம் ஓவியப்போட்டி
உடுமலையில் உலக புத்தக தினத்தையொட்டி மாணவர்களுக்கு செல்போன் மூலம் ஓவியப்போட்டி நடைபெற்றது.
உடுமலை,
உடுமலை அன்சாரி வீதியில் உள்ள முழு நேர கிளை நூலகம் எண் 2-ன் நூலக வாசகர் வட்டம் சார்பில், நேற்று உலக புத்தக தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மொபைல் வழியில் ஓவியம் மற்றும் கவிதைபோட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் செல்போன் வழியில் இந்த போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந் தது.
இந்த போட்டிகளில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 65 பேர் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை செல்போன் மூலம் வாட்ஸ்-அப்பில் நூலகர் மற்றும் நூலகர் வாசகர் வட்டத்தினருக்கு அனுப்பிவைத்திருந்தனர்.
அதில் கண், மூக்கு, காது ஆகியவற்றைத் தொடக்கூடாது, வீட்டில் இரு... விலகி இரு உள்ளிட்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள், விளையாட்டு உள்ளிட்ட ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கான ஏற்பாடுகளை நூலகர் வீ.கணேசன், நூலக வாசகர் வட்ட ஆலோசகர் பி.அய்யப்பன், துணைத்தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
போட்டிகளின் முடிவுகள், செல்போன் மூலம் தெரிவிக்கப்படும் என்றும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவை நூலகம் செயல்படும் ஞாயிற்றுக்கிழமை நாளில் வழங்கப்படும் என்றும் நூலகர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story