கோபியில் தடையை மீறி செயல்பட்ட கடைகளுக்கு ‘சீல்’
கோபியில் தடையை மீறி செயல்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
கடத்தூர்,
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட கடைவீதிகளில் உள்ள பாத்திரக்கடை, துணிக்கடைகள் மற்றும் பேன்சி ஸ்டோர்கள் அதிக அளவு திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. இதனால் கொரோனா நோய் தொற்று ஏற்படும் என்பதால் தனி நபர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை வருவாய்துறையினர், போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கோபியில் திடீர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அத்தியாவசியமற்ற கடைகள் திறப்பதை கண்டித்து எச்சரித்தனர். மேலும் ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் சாலைகளில் போக்குவரத்து குறைந்துள்ளதை சாதகமாக பயன்படுத்திய வணிகர்கள் தங்களது கடைகளின் முன்பு பந்தல் அமைப்பது பெயர் பலகைகள் மூலம் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம் பணியாளர்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனத்தில் ஏற்றிச்சென்றனர். பின்னர் காய்கறிகள் வாங்க முக கவசம் அணியாமலும் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமலும் வந்த பொதுமக்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர்.
கடைவீதியில் துணிக்கடை பாத்திரக்கடை மற்றும் பேன்சி ஸ்டோர்கள் ஊரடங்கையும் மீறி செயல்பட்டு வந்ததால் 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு போலீசார் சீல் வைத்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story