திருவாரூர் மாவட்டத்தில் சுகாதார பணியாளருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு


திருவாரூர் மாவட்டத்தில் சுகாதார பணியாளருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு
x
தினத்தந்தி 24 April 2020 3:55 AM IST (Updated: 24 April 2020 3:55 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் சுகாதார பணியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரடாச்சேரி, 

திருவாரூர் மாவட்டத்தில் சுகாதார பணியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதார பணியாளர்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பேரூராட்சி பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்டவர், கொரடாச்சேரியில் தஞ்சை சாலை பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. பொதக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார ஆய்வு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

தடை செய்யப்பட்ட பகுதி

சில நாட்களுக்கு முன்பு அவருக்கும், அவருடன் பணிபுரியும் சுகாதார ஆய்வு உதவியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இதில் அவருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவர் குடியிருந்த பகுதி முற்றிலுமாக தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தகர ஷீட்டால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு சுகாதார மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவரது குடும்பத்தினர் மற்றும் இவரோடு தொடர்புடைய நபர்களும் கணக்கெடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்து நிறுத்தம்

கொரடாச்சேரி பேரூராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அந்த பகுதிக்குள் வாகன போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கொரடாச்சேரியை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கு உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் செந்திலன் தெரிவித்தார்.

Next Story