திருவேற்காடு நகராட்சி 3 மண்டலங்களாக பிரிப்பு - வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொதுமக்கள் வெளியே வர அனுமதி
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க திருவேற்காடு நகராட்சியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நகராட்சி பகுதிகள் 3 மண்டலங்களாக பிரித்து பொதுமக்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்பட்டு உள்ளது.
பூந்தமல்லி,
இதுகுறித்து திருவேற்காடு நகராட்சி கமிஷனர் செந்தில்குமரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவேற்காடு நகராட்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும்போதே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தினமும் கடைகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் பொது இடங்களிலும், கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சில இடங்களில் சமூகவிலகலை கடைபிடிக்காமல் செல்கிறார்கள்.
கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தை பொதுமக்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே இன்று (அதாவது நேற்று) முதல் மே 3-ந்தேதி வரை திருவேற்காடு நகராட்சி பகுதியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதன்படி பொதுமக்கள் வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வெளியே சென்று வர அனுமதி வழங்கப்படுகிறது.
3 மண்டலங்களாக பிரிப்பு
அதற்காக திருவேற்காடு நகராட்சி பகுதி 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வார்டு 1 முதல் 6 வரை உள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், வார்டு 7 முதல் 11 வரை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும், வார்டு 12 முதல் 18 வரை உள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
புதன்கிழமை பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல அனுமதியில்லை. அன்றைய தினம் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும். குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கடைகள் இயங்கும். பொதுமக்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்கள் மட்டுமே வெளியே வரவேண்டும். பால் மற்றும் மருந்து கடைகள் மட்டும் எல்லா நாட்களிலும் திறந்திருக்க அனுமதி உண்டு. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் உடனிருந்தார்.
Related Tags :
Next Story