தஞ்சை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 55 ஆக உயர்வு: சிகிச்சை முடிந்து கணவர் வீடு திரும்பிய நிலையில் மனைவிக்கு கொரோனா உறுதி
தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை முடிந்து கணவர் வீடு திரும்பிய நிலையில் மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 356 பேர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
55 ஆக உயர்வு
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த 60 வயது நபர் ஆவார். இவருடைய கணவர் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்.
இவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். குணம் அடைந்து நேற்று வீட்டுக்குத் திரும்பிய 3 பேரில் இவரும் ஒருவர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
356 பேர் முடிவுக்காக காத்திருப்பு
கொரோனா உறுதி செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் 128 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 108 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. மேலும் 20 பேருக்கு பரிசோதனை முடிவு வர வேண்டி உள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த 526 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 422 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 104 பேருக்கு பரிசோதனை முடிவு வரவேண்டி இருக்கிறது.
சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகளுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையிலும், செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 1,842 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களில் 1,610 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை என தெரிய வந்தது. மேலும் 232 பேருக்கு பரிசோதனை முடிவு வர வேண்டியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 356 பேர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
Related Tags :
Next Story