கொரோனா வைரஸ் எதிரொலி: கிராம நுழைவு வாயிலில் தடுப்பு அமைத்து பாதுகாப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளி நபர்கள் கிராமத்திற்குள் வருவதை தடுக்கும் வகையில் கிராம மக்கள் கிராம நுழைவு வாயிலில் தடுப்பு அமைத்து தங்களை பாதுகாத்து வருகின்றனர்.
காரைக்குடி,
நாடு முழுவதும் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனாவை தடுக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதோடு, மக்களும் பல்வேறு தடுப்பு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களின் நுழைவு வாயிலில் தற்காலிகமாக தடுப்பு அமைத்து அதில் 2 அல்லது 3 பேர் தங்களது கிராமத்திற்கு வெளி நபர்கள் யாரும் உள்ளே வராமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பிற்காக நிற்கின்றனர்.
இதுதவிர வெளிப்பகுதியில் இருந்து காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்ய வரும் வியாபாரிகளை கிராமத்திற்குள் அனுமதிக்காமல் வெளியில் நிறுத்தி பொருட்களை வாங்குகின்றனர். மேலும் வீடுகள் தோறும் வேப்பிலை தோரணங்களை தொங்க விட்டும், வீதிகளில் மஞ்சள் கலந்த கிருமி நாசினி தண்ணீர் தெளித்தும் வருகின்றனர்.
இதுகுறித்து காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் கிராம மக்கள் கூறியதாவது:-
தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு அரசு எடுக்கும் செயல்பாடுகளை விட பொதுமக்கள் நாம் தான் அதிகளவில் ஒத்துழைப்பு வழங்கி பாதுகாப்போடு இருக்க வேண்டும். முககவசம் அணிதல், வெளியே செல்லாமல் வீட்டில் இருத்தல் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள வேண்டும்.
எங்கள் கிராமத்தின் நுழைவு வாயிலில் வெளிநபர்கள் உள்ளே வராமல் இருப்பதற்காக தடுப்பு அமைத்து அந்த பகுதியில் இரவு பகலாக பாதுகாத்து வருகிறோம். மேலும் நிவாரண பொருட்கள் வழங்கினால் கூட அதை பெறுவதற்காக பொதுமக்கள் கூட்டமாக நிற்காமல் சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு கூறினர்.
Related Tags :
Next Story