ஊரடங்கால், தவிக்கும் மாற்றுத்திறனாளிகள்


ஊரடங்கால், தவிக்கும் மாற்றுத்திறனாளிகள்
x
தினத்தந்தி 24 April 2020 4:37 AM IST (Updated: 24 April 2020 4:37 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானத்தை இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர், 

ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானத்தை இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைக்கான காய்கறிக்கடை, மளிகைக்கடை, மருந்துக்கடை போன்ற கடைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடைகள் மூடப்பட்டுள்ளதால், சிறிய கடைகளை வைத்திருப்பவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

இவர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார்கள். கூடை பின்னுதல், நாற்காலி பின்னுதல், சைக்கிள் பழுது பார்ப்பது, பஞ்சர் ஒட்டுவது, எரிவாயு அடுப்பு பழுது பார்த்தல் உள்பட பல்வேறு கடைகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் கடந்த 30 நாட்களாக கடைகளை திறக்க முடியாமல் உள்ளனர்.

வருமானம் இல்லை

இவர்கள் அனைவரும் தங்களது கடைகளில் தினமும் கிடைக்கும் வருமானத்தில் தங்களது குடும்பங்களை நடத்தி வருபவர்கள். ஆனால் தற்போது வருமானம் இல்லாததால் ஒவ்வொரு நாளையும் மிகுந்த சிரமத்துடனேயே கடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அரிசி, பருப்பு உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய ரூ.1000 மற்றும் நிவாரண பொருட்கள் கிடைத்தது.

ஆனால் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகிறார்கள். இவர்களுக்கு அரசு சார்பில் இதுவரை எந்தவித நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. இவர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, அல்லது நல வாரியம் மூலம் ஏதாவது நிவாரணம் அறிவிப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.

நிவாரணம் அறிவிக்கப்படுமா?

இது குறித்து தேசிய பார்வையற்றோர் சம்மேளன பொதுச்செயலாளர் ராஜூ கூறுகையில், “அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் ஊரடங்கு உத்தரவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சிறு, சிறு தொழில்களை செய்து வந்தனர். யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தமாக பிழைப்பு நடத்தி வந்தனர். தற்போது ஊரடங்கினால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் இவர்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் குடும்பம் நடத்துவதற்கே கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கட்டிட தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்துள்ளதைப்போல், மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு நிவாரணம் அறிவித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறன்” என்றார்.

Next Story