தாராவியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 214 ஆக உயர்வு
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 214 ஆக உயர்ந்து உள்ளது. தொற்று அறிகுறி இருப்பவர்களை குடிசைகளில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
மும்பை,
உலகிலேயே மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடங்களில் ஒன்று தாராவி பகுதி ஆகும். ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான இங்கு தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி தாராவியில் முதலில் 56 வயது துணிக்கடைக்காரர் கொரோனாவுக்கு பலியானார். இதையடுத்து இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200-ஐ தாண்டி 214 ஆக உயர்ந்தது. அதாவது ஒரேநாளில் இங்கு புதிதாக 25 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
நேதாஜி சொசைட்டி
இதில் தாராவி நேதாஜி சொசைட்டியில் முதல் முதலாக ஒரு நபருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மற்றவர்கள் தாராவி குட்டிவாடி, இந்திராநகர், ஆசாத்நகர், பீலா பங்களா, சந்த்கக்கயா மார்க், கிராஸ்ரோடு, கும்பர்வாடா, கல்யாணவாடி, முகுந்த்நகர், 90 அடி சாலை, குஞ்ச்குருவேநகர், சாம்தா பஜார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். இதனால் இங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்து உள்ளது.
இதேபோல நேற்று தாராவி சாஸ்திரிநகரை சேர்ந்த 69 வயது முதியவர் கொரோனாவுக்கு உயிரிழந்தார். இதன் மூலம் தாராவியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. தாராவியில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருவது அப்பகுதி மக்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே கூறியதாவது:-
வெளியேற்ற திட்டம்
தாராவியில் வீடுகள் மிகச்சிறிய அளவில் உள்ளன. அந்த வீடுகளில் 10 முதல் 12 பேர் வசிக்கின்றனர். எனவே அங்கு பொதுமக்களை வீடுகளில் தனிமைப்படுத்தினாலும், சமூக விலகலை பின்பற்ற முடியாமல் போகிறது. இது குறித்து நாங்கள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் மாநகராட்சி கமிஷனர் பிரவீன் பர்தேசியிடம் ஆலோசனை நடத்தினோம். தாராவியில் வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் கைகொடுக்காது. எனவே பள்ளி விளையாட்டு மைதானங்கள் தனிமைப்படுத்தும் மையங்களாக பயன்படுத்தப்படும். கொரோனா அறிகுறி இருப்பவர்களை குடிசைப்பகுதியில் இருந்து வெளியேற்றும் திட்டம் தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story