மண்டபம் அருகே செவிலியருக்கு கொரோனா உறுதி; ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது


மண்டபம் அருகே செவிலியருக்கு கொரோனா உறுதி; ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 24 April 2020 5:06 AM IST (Updated: 24 April 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.

பனைக்குளம், 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் உச்சிப்புளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதுவலசை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய ஒரு செவிலியர், உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

தொண்டியை சேர்ந்த இவர், தற்போது சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதியில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். அங்கிருந்து தினமும் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பணிக்கு வந்து செல்கிறார். மேலும் அவ்வப்போது கொரோனா நோய் குறித்த கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்ட அவர், பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த செவிலியருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குனர் அஜித் பிரபுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் பணியாற்றக்கூடிய அறைகள், நோயாளிகள் இருக்கும் இடங்கள், ஆம்புலன்ஸ் நிறுத்தப்படும் இடம் போன்ற பல்வேறு இடங்களை பார்வையிட்டு கிருமி நாசினி தெளிப்பதற்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் வராத அளவில் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. அந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 88 பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிய வருகிறது.

இது உச்சிப்புளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story