ஊரடங்கு முடிந்தவுடன் வெளிமாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் - ரெயில்வே மந்திரிக்கு, அஜித்பவார் கடிதம்


ஊரடங்கு முடிந்தவுடன் வெளிமாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் - ரெயில்வே மந்திரிக்கு, அஜித்பவார் கடிதம்
x
தினத்தந்தி 24 April 2020 5:09 AM IST (Updated: 24 April 2020 5:09 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு முடிந்தவுடன் வெளிமாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என ரெயில்வே மந்திரிக்கு துணை முதல்-மந்திரி அஜித்பவார் கடிதம் எழுதி உள்ளார்.

மும்பை, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 3-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

இந்தநிலையில் ஊரடங்கு காலம் முடிந்தவுடன் மராட்டியத்தில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப சிறப்பு ரெயில்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு, மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் கடிதம் எழுதியுள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:-

அவசரம் காட்டலாம்...

ஊரடங்கை தொடர்ந்து, மராட்டியத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசு தங்குமிடம் மற்றும் உணவு வழங்கி வருகிறது. 

ஊரடங்கு காலம் முடிந்தவுடன் மராட்டியத்தில் தங்கியுள்ள வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல அவசரம் காட்டலாம் என தெரிகிறது. அவ்வாறு நடந்தால் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும். இது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

இதை தவிர்க்க அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல மும்பை மற்றும் புனேயில் இருந்து சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story