கள்ளழகர் கோவில் சித்திரை விழா ஆகம விதிப்படி நடத்தப்படுகிறதா? - அதிகாரி விளக்கம்


கள்ளழகர் கோவில் சித்திரை விழா ஆகம விதிப்படி நடத்தப்படுகிறதா? - அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 24 April 2020 5:11 AM IST (Updated: 24 April 2020 5:11 AM IST)
t-max-icont-min-icon

கள்ளழகர் கோவில் சித்திரை விழா ஆகம விதிப்படி நடத்தப்படுகிறதா? என்பது குறித்து கோவில் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

அழகர்கோவில், 

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அழகர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த விழா கடந்த ஜனவரி 30-ந் தேதி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடந்தது. இந்த நிலையில் தொடர் முன்னோட்ட நிகழ்ச்சியாக நேற்று காலை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெற இருந்தது. அரசின் ஊரடங்கு காரணமாக இந்த விழாவும் ரத்தானது.

வருகிற 3-ந் தேதி வரை ஊரடங்கு நீடிப்பதால் கள்ளழகர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறுவதற்கான வேலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

இருப்பினும் வருகிற 3-ந்தேதி சித்திரை திருவிழா தொடங்குவதற்கும், 5-ந் தேதி கள்ளழகர் மதுரைக்கு புறப்படுவதற்கும், 6-ந் தேதி எதிர்சேவை நடைபெறுவதற்கும், 7-ந்தேதி தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் வாகனத்தில் இறங்குவதற்கும், 8-ந்தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தரும் நிகழ்ச்சிக்கும், 9-ந்தேதி தாசாவதார நிகழ்ச்சிக்கும், 10-ந்தேதி பூப்பல்லக்கு விழாவிற்கும், 11-ந்தேதி கள்ளழகர் மலைக்கு திரும்புவதற்குமான விழா திட்டமிடல் செய்திருந்தனர்.

ஊரடங்கு காரணமாக இந்த நிகழ்ச்சிகள் அத்தனையும் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக அமைந்துள்ளது.

மேலும் இந்த வருடம் தற்போது நடைபெற இருந்த கொட்டகை முகூர்த்தம் தடைபட்டதால் 427 மண்டகப்படிதாரர்கள் தங்களது பணியை தொடங்கவில்லை. கள்ளழகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 6-ந்தேதி ஆகம விதிப்படி கோவில் உள் பிரகாரத்தில் பட்டர்களை வைத்து நடத்தப்பட்டது.

இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி அனிதா கூறியதாவது:-

பிரசித்தி பெற்ற இந்த அழகர்கோவில் சித்திரை திருவிழா நடைபெற வேண்டும் என லட்சக்கணக்கான பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இருப்பினும் திருவிழா நடைபெறுவதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கும், சென்னை அறநிலையத்துறை ஆணையருக்கும், தமிழக அரசுக்கும் உரிய அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். இதற்கான முடிவுகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். திருவிழா நடப்பது சம்பந்தமாக கோவில் பட்டர்களுடனும் அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் ஆலோசித்து வருகிறோம். மேலும் ஆகம விதிப்படி திருவிழா நடத்தலாமா? எனவும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story