சரக்கு வாகனங்கள் வராததால் மாட்டு வண்டி போக்குவரத்துக்கு மாறிய வியாபாரிகள்


சரக்கு வாகனங்கள் வராததால் மாட்டு வண்டி போக்குவரத்துக்கு மாறிய வியாபாரிகள்
x
தினத்தந்தி 24 April 2020 5:13 AM IST (Updated: 24 April 2020 5:13 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால், சரக்கு வாகனங்கள் வராததால் வியாபாரிகள், மாட்டு வண்டி போக்குவரத்துக்கு மாறி உள்ளனர்.

குத்தாலம், 

ஊரடங்கால், சரக்கு வாகனங்கள் வராததால் வியாபாரிகள், மாட்டு வண்டி போக்குவரத்துக்கு மாறி உள்ளனர்.

ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரெயில், பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நகரங்களில் மட்டுமல்லாது, கிராமங்களிலும் பொதுமக்களின் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த ஊரடங்கால் மருத்துவத்துறையை தவிர மளிகை கடைகள், காய்கறி கடைகள், அரிசி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு திறக்கப்படும் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்கவும், முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மாட்டு வண்டி போக்குவரத்து

இந்த நிலையில் மயிலாடுதுறை நகரில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் மளிகை கடைகள் அதிகமாக திறக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான மளிகை கடை உரிமையாளர்கள், தங்களுக்கு வசதியான இடத்தில் குடோன் அமைத்து, அங்கு மளிகை பொருட்களை இருப்பு வைத்துள்ளனர். மளிகை கடைகளுக்கும், குடோனுக்கும் சற்று தூர இடைவெளி இருப்பதால் ஊரடங்குக்கு முன்பு குடோனில் இருந்து பொருட்களை வாடகை சரக்கு வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு எடுத்து சென்றனர்.

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் குடோனில் இருந்து மளிகை பொருட்களை கடைகளுக்கு எடுத்து செல்ல பெரும்பாலான வாடகை சரக்கு வாகனங்கள் வருவதில்லை. இதனால் கடை உரிமையாளர்கள் தற்போது மாட்டு வண்டி போக்குவரத்துக்கு மாறி உள்ளனர்.

வியாபாரிகளிடையே மாற்றம்

அதன்படி மயிலாடுதுறை நகரில் குடோனில் இருந்து சரக்கு பரிமாற்றத்திற்கு மாட்டு வண்டியை வியாபாரிகள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். மேலும் விவசாயிகளும், தங்களது விவசாய பணிகளை தொடங்கி விட்டதால், மயிலாடுதுறை நகரில் இருந்து உர மூட்டைகளை மாட்டு வண்டிகள் மூலமே கிராமங்களில் உள்ள தங்களது வயல்களுக்கு கொண்டு செல்கின்றனர்.

பொதுவாக கிராமங்களில் விவசாயிகள், விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்த மாட்டு வண்டிகள், ஊரடங்கால் நகரத்திலும், நகரத்தில் இருந்து கிராமங்களுக்கும் சரக்கு பரிமாற்றத்திற்கு பயன்படுத்துவது வியாபாரிகளிடையே மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கும் அன்றாட செலவுக்கு வருமானம் கிடைக்கிறது.

Next Story