கர்நாடகத்தில் ஊரடங்கு மேலும் தளர்வு: கட்டுமான பணிகள்-செல்போன் ரீசார்ஜ் கடைகளுக்கு விலக்கு - அரசின் தலைமை செயலாளர் உத்தரவு


கர்நாடகத்தில் ஊரடங்கு மேலும் தளர்வு: கட்டுமான பணிகள்-செல்போன் ரீசார்ஜ் கடைகளுக்கு விலக்கு - அரசின் தலைமை செயலாளர் உத்தரவு
x
தினத்தந்தி 24 April 2020 5:40 AM IST (Updated: 24 April 2020 5:40 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி கட்டுமான பணிகள், செல்போன் ரீசார்ஜ் கடைகளுக்கு விலக்கு அளித்து அரசின் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு கடந்த மாதம் (மார்ச்) 25-ந் தேதி அமல்படுத்தப்பட்டது. இது வருகிற மே மாதம் 3-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், கர்நாடகத்தில் நேற்று முன்தினம் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டது. அதாவது தொழில் நிறுவனங்கள், சரக்கு வாகனங்கள், சரக்கு லாரிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. கிராமப்புறங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

விவசாயம் தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகள், விதைகள், தோட்டக்கலை பயிர்களுக்கு மருந்து தெளித்தல், ஆய்வு செய்தல் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. மரக்கன்றுகளை நடுவதற்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வது, தேன் பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

குழாய்கள் பதித்தல்

மூங்கில், தேங்காய், பாக்கு, மசாலா பொருட்கள் உற்பத்தி தொடர்பான பொருட்களை பயிரிடுவது, அறுவடை செய்வது, பேக்கேஜ் பணிகளை மேற்கொள்வது, விற்பது, சந்தைக்கு கொண்டு செல்வது போன்ற பணிகள் அனுமதிக்கப்படுகின்றன. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்கள், நுண்ணிய நிதி நிறுவனங்கள், கூட்டுறவு கடன் சங்கங்கள் திறக்கலாம்.

மாணவர்களுக்கான புத்தகங்களை விற்பனை செய்யும் புத்தக கடைகள், மின்விசிறி கடைகள், குடிநீர் குழாய்களை பதித்தல், மின், தொலைத்தொடர்பு மற்றும் பிற கேபிள் வயர்களை பூமிக்கடியில் அமைத்தல் போன்ற பணிகள் அனுமதிக்கப்படுகின்றன. நகரங்களில் கட்டுமான பணிகளை தொடங்கலாம். ஆனால் தொழிலாளர்கள் அதே இடத்தில் தங்கியிருக்க வேண்டும். கட்டிட பணிக்காக தொழிலாளர்களை வெளியில் இருந்து அழைத்து வரக்கூடாது.

செல்போன் ரீசார்ஜ் கடைகள்

வனத்துறையில் மரக்கன்றுகளை நடுதல் மற்றும் அது தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம். நகரங்களில் செல்போன் ரீசார்ஜ் கடைகள், உணவு பதப்படுத்தும் நிலையங்கள், பிரெட் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், பால் பதப்படுத்தும் நிலையங்கள், மாவு அரைக்கும் ஆலைகள், பருப்பு ஆலைகள் செயல்படலாம்.

உலர்ந்த பழங்கள், ஐஸ்கிரீம், பழச்சாறு கடைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் அவற்றை வாங்கி செல்ல மட்டுமே அனுமதி. அங்கே அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ள இந்த நிறுவனங்கள் அனைத்தும் சமூக விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அங்கு பணியாற்றுவோரும், மக்களும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story