தற்கொலைக்கு முயன்ற வாலிபருக்கு சிகிச்சை அளிக்காததை கண்டித்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தற்கொலைக்கு முயன்றவருக்கு சிகிச்சை அளிக்காததை கண்டித்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சியான் மகன் அசோக்(வயது 28). இவருக்கு திருமணமாகி 8 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று அசோக்குமார், வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் அசோக்கை தவிர மற்றவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்வதற்காக வந்திருந்த மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், அங்கிருந்து புறப்பட தயாரானார்.
இதைபார்த்த அசோக்கின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அசோக்கை ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சிகிச்சைக்காக அனுமதித்தும், இதுவரை அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கிடையே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அசோக் இறந்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் இறந்த அசோக்குக்கு ஒரு மணி நேரமாக சிகிச்சை அளிக்காததால் தான் அவர் இறந்து விட்டார் என்று கூறி அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, சமாதானப்படுத்தி இதுகுறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story