மதுபோதையில் தகராறு: வாலிபர் அடித்து கொலை - நண்பர் கைது


மதுபோதையில் தகராறு: வாலிபர் அடித்து கொலை -  நண்பர் கைது
x
தினத்தந்தி 24 April 2020 4:00 AM IST (Updated: 24 April 2020 5:51 AM IST)
t-max-icont-min-icon

மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

மரக்காணம், 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் யுவராஜ் (வயது 22). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தினேஷ்பாபு (22). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவார்கள். கூலி தொழிலாளியான இவர்கள் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் யுவராஜ், தினேஷ்பாபு இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு அதிக பணம் கொடுத்தது, ரஜினியா? விஜய்யா? என்று அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த தினேஷ்பாபு, யுவராஜை கையால் பலமாக தாக்கி கீழே தள்ளினார். தரையில் கிடந்த கல்லில் யுவராஜின் தலை மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கீழே சுருண்டு விழுந்து மயங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள், யுவராஜை மீட்டு சிகிச்சைக்காக மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், யுவராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தினேஷ்பாபுவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story