அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி அட்டை கிடைக்காமல் முதியோர்கள் அவதி
பாளையங்கோட்டையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி அட்டை கிடைக்காமல் முதியோர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி அட்டை கிடைக்காமல் முதியோர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அனுமதி அட்டை
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. காலை 6 மணி முதல் மதியம் 1 மணிக்குள் மளிகை பொருட்கள், காய்கறிகளை வாங்கிக் கொள்ள வேண்டும். நெல்லை மாநகராட்சி பகுதியில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வெளியே வந்து செல்லும் வகையில் மாநகராட்சி சார்பில் அனுமதி அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அந்த அட்டை இல்லாமல் வெளியே வருவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
ஆனால் இந்த அட்டை அனைத்து வீடுகளுக்கும் கிடைக்கவில்லை என் ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் பாளையங்கோட்டை தியாகராஜநகர், பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பாக 60 வயதை கடந்த தம்பதி மட்டும் வசிக்கும் வீடுகளுக்கு இந்த அனுமதி அட்டை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் வெளியே வரவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கோரிக்கை
எனவே அனைத்து மக்களுக்கும் அனுமதி அட்டை வழங்க வேண்டும். முதியோர்களுக்கு வழங்காவிட்டால், அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்கி கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மூத்த குடிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “கொரோனா பரவாமல் மக்களை பாதுகாக்க இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா முதியோரை எளிதில் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே முதியோர்கள் பக்கத்து வீட்டாரின் உதவியுடன் பொருட்கள் வாங்கிக்கொள்ள வேண்டும். அபராத நடவடிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தவே மேற்கொள்ளப்படுகிறது“ என்றனர்.
Related Tags :
Next Story