குமரியில் மேலும் 3 பேர் குணமடைந்தனர் வீடு திரும்புவது குறித்து இன்று முடிவு
குமரியில் மேலும் 3 பேர் குணமடைந்தனர். அவர்கள் வீடு திரும்புவது குறித்து இன்று முடிவு செய்யப்படுகிறது.
நாகர்கோவில்,
குமரியில் மேலும் 3 பேர் குணமடைந்தனர். அவர்கள் வீடு திரும்புவது குறித்து இன்று முடிவு செய்யப்படுகிறது.
16 பேருக்கு கொரோனா
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆக இருந்தது. இவர்கள் வசித்த நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை, மணிக்கட்டிப் பொட்டல் அனந்தசாமிபுரம், தேங்காப்பட்டணம் தோப்பு ஆகிய பகுதிகள் தடை செய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் வெள்ளாடிச்சிவிளையைச் சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று நீங்கியது. அவருடைய குடும்பத்தினர் மேலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருவதால் அவர் ஆஸ்பத்திரியை விட்டுச் செல்லாமல் இருந்து வருகிறார்.
மேலும் 3 பேர் குணமடைந்தனர்
இதையடுத்து நேற்று முன்தினம் தேங்காப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்கவர் கொரோனாவில் இருந்து குணமடைந்தார். அவரை டாக்டர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்து வழியனுப்பி வைத்தனர். இதனால் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 14 பேர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.
அவர்களில் 8 பேருக்கு 14 நாள் சிகிச்சை முடிந்ததால் முதல்கட்ட பரிசோதனை நடந்தது. இதில் 3 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். அவர்களில் 4 வயது சிறுவன் மற்றும் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் ஆவர். மற்ற 5 பேருக்கும் கொரோனா நீங்கவில்லை.
50 பேருக்கு பரிசோதனை
3 பேருக்கும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய 2-வது பரிசோதனை நேற்று நடந்தது. ஆனால் பரிசோதனை முடிவுகள் வர காலதாமதம் ஆனது. இரவு வரை அவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரவில்லை. இதில் அவர்கள் 3 பேருக்கும் கொரோனா தொற்று முழுமையாக நீங்கி இருந்தால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வீட்டுக்கு அனுப்பி வைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் நேற்று 50 பேருக்கு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. நேற்றும் 9 பேர் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஆகியவற்றுடன் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தும் வார்டு மற்றும் தொற்றுநோய் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story