பொட்டலம் போட ஆட்கள் கிடைக்காததால் ரேஷன் கடைகளுக்கு, மொத்தமாக மளிகை பொருட்கள் அனுப்பி வைப்பு
பொட்டலம் போட போதிய ஆட்கள் கிடைக்காததால் ரேஷன் கடைகளுக்கு மொத்தமாக மளிகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட்டன.
திருச்சி,
பொட்டலம் போட போதிய ஆட்கள் கிடைக்காததால் ரேஷன் கடைகளுக்கு மொத்தமாக மளிகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்ட்டன. இதனால், தனித்தனியாக எடைபோட்டு கொடுக்க முடியாமல் விற்பனையாளர்கள் திணறி வருகிறார்கள்.
பொட்டலம் போட ஆட்கள் இல்லை
ஊரடங்கு காலத்தில் மக்கள் கடை, கடையாக ஏறி இறங்கி வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்கு திணறி வருகிறார்கள். எனவே, தேவையின்றி சாலையில் வாகன நடமாட்டத்தை தவிர்க்கும் வகையில் அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலேயே 19 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.500-க்கு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் மளிகை தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பொட்டலம் போடும் பணி முடியாததால், அவை ரேஷன் கடைகளுக்கு வரவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது. மளிகை தொகுப்பு வாங்க ஆர்வமுடன் ரேஷன் கடைக்கு சென்ற மக்கள் பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மொத்தமாக அனுப்பி வைப்பு
ஒவ்வொரு கடையிலும் தினமும் 50 மளிகை தொகுப்புகள் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரேஷன் கடைகளுக்கு மளிகை பொருட்களை வினியோகம் செய்யும் கூட்டுறவுத்துறை பொட்டலம் போட தேவையான ஆட்கள் கிடைக்கவில்லை என்பதால், மளிகை பொருட்களை பொட்டலம் போடாமல் மொத்தமாக ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் மூட்டைகளில் அனுப்பி வைத்து விட்டது.
ரேஷன் கடைகளில் ரூ.500 கொடுத்து மளிகை தொகுப்பு கேட்பவர்களுக்கு, விற்பனையாளர்கள் அவற்றை மூட்டைகளில் இருந்து எடுத்து தனித்தனியாக எடை போட்டு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
திணறும் விற்பனையாளர்கள்
இதனால், ஒருவருக்கு ஒரு தொகுப்புக்கான மளிகை சாமான்களை எடை போட்டு கொடுக்கவே 30 நிமிடம் ஆவதாக கூறி விற்பனையாளர்கள் தரப்பில் தெரிவித்தனர். மேலும், நிர்ணயிக்கப்பட்டுள்ள 19 பொருட்களில் இன்னமும் சில பொருட்கள் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி காந்திமார்க்கெட் அருகே உள்ள பந்தேகானா தெருவில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் துவரம்பருப்பு, புளி, பொட்டுக்கடலை, பூண்டு, மிளகு, சீரகம், வெந்தயம், மிளகாய்த்தூள், மல்லித்தூள், வரமிளகாய், சோம்பு, பட்டை உள்ளிட்ட 12 பொருட்கள் மட்டுமே வந்திருப்பதாகவும் ஆயில், உப்பு, டீத்தூள் உள்ளிட்ட சில பொருட்கள் வரவில்லை என்றும் விற்பனையாளர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story