சமயபுரத்துக்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு: காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கங்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்


சமயபுரத்துக்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு: காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கங்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 24 April 2020 9:02 AM IST (Updated: 24 April 2020 9:02 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரத்துக்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

திருச்சி, 

சமயபுரத்துக்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்கள் சார்பில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

காந்தி மார்க்கெட் வியாபாரிகள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க காந்தி மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. திருச்சி பால்பண்ணை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கும், 11 இடங்களில் சில்லரை வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டது. ஆனால், பால்பண்ணை அருகே இரவு முதல் அதிகாலை வரை நடைபெறும் மொத்த வியாபாரத்தின் போது, அங்கு காய்கறிகளை வாங்க வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில், காந்திமார்க்கெட் மொத்த வியாபாரிகளை சமயபுரம் அருகே உள்ள ஆட்டுச்சந்தைக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதுகுறித்து காந்திமார்க்கெட் மொத்த வியாபாரிகளிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக வியாபாரிகளின் ஆலோசனை கூட்டம் பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டியில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு தலைமை தாங்கினார். காந்தி மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் 27 சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

காலவரையற்ற வேலைநிறுத்தம்

சமயபுரம் ஆட்டுச் சந்தைக்கு காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரத்தை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதை வியாபாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. காந்தி மார்க்கெட்டை திறந்து மீண்டும் வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கும் வரை வேறு எந்த இடத்திலும் வியாபாரம் செய்ய மாட்டோம். காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறந்து வியாபாரம் நடத்த அனுமதிக்கும் வரை கடைகளை நடத்தாமல் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், 11 இடங்களில் நடைபெறும் சில்லரை வியாபாரமும் பாதிக்கப்படுவதோடு, காய்கறிகளின் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Next Story