வாணியம்பாடி தாலுகா பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா - காவல் நிலையத்துக்கு ‘சீல்’


வாணியம்பாடி தாலுகா பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா - காவல் நிலையத்துக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 24 April 2020 3:45 AM IST (Updated: 24 April 2020 9:28 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலைய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் நிலையத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

வாணியம்பாடி, 

திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 21-ந் தேதி 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் வாணியம்பாடியில் கடந்த 21-ந் தேதி சுகாதாரத்துறை சார்பில் காவல்துறையை சேர்ந்த 23 பேர் மற்றும் வருவாய்த்துறையினர் உள்பட 54 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 53 பேருக்கு தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டது. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மட்டும் கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர் நேற்று வேலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் அவர் பணிபுரிந்து வந்த வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையம் மற்றும் அவர் வசித்த குடியிருப்பு பகுதி முழுவதும் நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அவரது வீடு மற்றும் குடியிருப்பு பகுதிக்கும் பூட்டு போடப்பட்டது.

இன்ஸ்பெக்டருடன் பணிபுரிந்த 37 காவலர்களில் 30 பேர் வாணியம்பாடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும் 7 காவலர்கள் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் இன்ஸ்பெக்டர் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணும் தனிமைப்படுத்தப்பட்டார்.

அத்துடன் இன்ஸ்பெக்டர் குடியிருந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் வாணியம்பாடிக்கு வந்து இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருக்கு ஆறுதல் தெரிவித்து பேசினார்.

இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் வாணியம்பாடி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் இன்ஸ்பெக்டர் கடந்த 19-ந் தேதி வாலாஜாவில் உள்ள தனது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று வாலாஜா நகராட்சி சார்பில், அவரது வீட்டின் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அப்பகுதியை தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்றது.

மேலும் மருத்துவ குழுவினர்கள் இன்ஸ்பெக்டர் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் கணவர் சிதம்பரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். தனது மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்த அவர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இருப்பினும் அவருக்கு மறு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே துணை போலீஸ் சூப்பிரண்டு சபாநாயகர் தெருவில் உள்ள தனது வீட்டில் தங்கி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனிமைப்படுத்திக் கொண்டதால், அவருடன் பணியாற்றிய போலீசார் மற்றும் அதிகாரிகள் பீதியில் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Next Story