பாதிக்கப்பட்ட நண்பருடன் தாயம் விளையாடிய கொத்தனார் உள்பட 3 பேருக்கு கொரோனா


பாதிக்கப்பட்ட நண்பருடன் தாயம் விளையாடிய கொத்தனார் உள்பட 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 April 2020 3:45 AM IST (Updated: 24 April 2020 9:28 AM IST)
t-max-icont-min-icon

பாதிக்கப்பட்ட நண்பருடன் தாயம் விளையாடிய கொத்தனார் உள்பட 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசால் மொத்தம் 77 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில், ஏற்கனவே 44 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பினர். ஒருவர் மட்டும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இதற்கிடையே நேற்று ஒரு சிறுமி, 5 பெண்கள் உள்பட மேலும் 11 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பினர். இவர்களில் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் 5 பேரும், மாசிலாமணிபுரத்தில் 3 பேரும், அண்ணாமலையார் மில் மேடு பகுதியில் 2 பேரும், ஒட்டன்சத்திரத்தில் ஒருவரும் ஆவர். இதன்மூலம் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆனது.

அதேநேரம் பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பிளிக்கையை அடுத்த கொசவப்பட்டியில் ஆம்னி பஸ் டிரைவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருடைய குடும்பத்தினர், நண்பர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் டிரைவரின் நண்பரான கொத்தனாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று தெரியவந்தது. ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த போது டிரைவர், கொத்தனார் மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து தாயம் விளையாடியுள்ளனர். அப்போது டிரைவரிடம் இருந்து கொத்தனாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவத்துறையினர் தெரிவித்தனர்.

அதேபோல் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த செல்போன் கடைக்காரர் மற்றும் பெரியகலையம்புத்தூரை சேர்ந்த இலை வியாபாரி ஆகியோருக்கு அவர்களுடைய உறவினர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதன்மூலம் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்தது.

Next Story