திண்டுக்கல் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறிய 41 கடைகளுக்கு ‘சீல்’
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 41 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்படும் கடைகள், சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் வரை மொத்தம் 42 கடைகளை அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று நகரில் பல்வேறு இடங்களில் அத்தியாவசிய கடைகளை தவிர இதர கடைகளும் திறந்து இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நாகல்நகர், பாரதிபுரம், பெரிய கடைவீதி, மேற்குரதவீதி உள்பட நகர் முழுவதும் மாநகராட்சி துப்புரவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி 5 மிட்டாய் கடைகள் மற்றும் மிக்சர் கடை, நகை அடகு கடை என அத்தியாவசிய பொருட்களை விற்காத 10 கடைகள் திறந்து இருந்தன. இதையடுத்து அந்த கடைகளை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
இதற்கிடையே ஒருசில மளிகை கடைகள், எண்ணெய் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கும்பலாக நின்று பொருட்களை வாங்குவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கடைக்காரர்கள் எந்தவித ஏற்பாடும் செய்யவில்லை.
மேலும் சில கடைக்காரர்கள் முக கவசம் அணியாமல், கைக்குட்டையை அணிந்து வியாபாரம் செய்தனர். இதையடுத்து சமூக இடைவெளி கடைபிடிக்காதவை, முக கவசம் அணியாதவரின் கடைகளையும் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதன்மூலம் நேற்று ஒரே நாளில் மொத்தம் 23 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதே போல் நேற்று பழனி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பழனி நகர்நல அலுவலர் வேல்முருகன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் பழனி நகர் பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது காந்திமார்க்கெட், புதுதாராபுரம் ரோடு, ஆர்.எப்.ரோடு ஆகிய பகுதிகளில் துணிக்கடைகள், சிப்ஸ் கடைகள், இரும்புக்கடைகள் ஆகியவை திறந்திருந்தன. இதையடுத்து அந்த கடைகளை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். அதன்படி மொத்தம் 12 கடைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
மேலும் பழனி நகராட்சி அதிகாரிகள் மார்க்கெட் ரோடு, திண்டுக்கல் சாலையில் முககவசம் அணியாமலும், மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்றவர்களையும் பிடித்து அபராதம் விதித்தனர். அதன்படி மொத்தம் 50 பேரிடம் இருந்து ரூ.100 வீதம் ரூ.5 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களில் முககவசம் அணிந்து வரும்படி எச்சரித்து அனுப்பினர். நத்தத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி அனுமதியின்றி திறந்து வைத்திருந்த 6 கடைகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையில் போலீசார் ‘சீல்’ வைத்தனர்.
Related Tags :
Next Story