தேனி அருகே, குடோனில் பதுக்கிய ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 4 பேர் கைது; கார் பறிமுதல்
தேனி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆண்டிப்பட்டி,
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் தேனி, மதுரை மாவட்ட எல்லையான கணவாய் மலைப்பகுதியில் ஆண்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவண தெய்வேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று காலை வழக்கம்போல் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது மதுரையில் இருந்து தேனி நோக்கி கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி போலீசார் விசாரித்ததில், காரில் வந்தவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து காரில் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் மதுரை அடைக்கம்பட்டியை சேர்ந்த துரைராஜ் (வயது 34) என்றும், தேனி அருகே வெங்கடாசலபுரத்தில் உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும், அவற்றை வாங்குவதற்காக பணத்தை கொண்டு செல்வதாகவும் கூறினார்.
இதனையடுத்து துரைராஜை அழைத்துக்கொண்டு, வெங்கடாசலபுரத்தில் உள்ள குடோனிற்கு போலீசார் சென்றனர். அப்போது குடோனில் சோதனையிட்டதில், மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பதுக்கி வைத்திருந்த 39 மூட்டை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் துரைராஜின் காரும், அவர் கொண்டு வந்த ரூ.4 லட்சத்து 30 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து, புகையிலை பொருட்களை வாங்க வந்த மதுரை அடைக்கம்பட்டியை சேர்ந்த துரைராஜ், குடோன் உரிமையாளர் நவரத்தினவேல் (38), குடோனில் வேலை பார்த்த மணிகண்டன் (38), ராஜகுரு (31) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஊரடங்கு நடவடிக்கைக்கு முன்பு வரை ரூ.15-க்கு விற்கப்பட்ட ஒரு புகையிலை பாக்கெட், தற்போது ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் புகையிலை பொருட்களை கொள்ளை லாபத்தில் விற்கலாம் என்ற எதிர்பார்ப்பில் அவற்றை பதுக்கி வைத்திருந்ததாக கைதான நபர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story