தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2,364 பேருக்கு கொரோனா பரிசோதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2,364 பேருக்கு கொரோனா பரிசோதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 24 April 2020 11:32 AM IST (Updated: 24 April 2020 11:32 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

ஊரடங்கு

கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை மே மாதம் 3-ந் தேதி வரை நீட்டித்து பிரதமர் உத்தரவிட்டு உள்ளார். தமிழக முதல்-அமைச்சரும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தி ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயினால் 27 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒருவர் இறந்து விட்டார். 19 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மற்றவர்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள்.

2,364 பேர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறித்து இதுவரை 2 ஆயிரத்து 364 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் முக கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு பணியாற்ற வேண்டும். அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் 198 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.

ஒத்துழைக்க வேண்டும்

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். வெளியே வரும் போது முக கவசங்களை அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story