ஸ்ரீவைகுண்டம்-சாத்தான்குளத்தில் சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது 94 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


ஸ்ரீவைகுண்டம்-சாத்தான்குளத்தில் சாராயம் காய்ச்சிய 4 பேர் கைது 94 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 24 April 2020 12:11 PM IST (Updated: 24 April 2020 12:11 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளத்தில் சாராயம் காய்ச்சிய 4 பேரை போலீசார் கைது செய்து, 94 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.

ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளத்தில் சாராயம் காய்ச்சிய 4 பேரை போலீசார் கைது செய்து, 94 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.

சாராயம் காய்ச்சினர்

ஸ்ரீவைகுண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருக பெருமாள் தலைமையில் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் கஸ்பா குளத்தில் முட்புதர் செடிகளுக்கு நடுவே சிலர் சாராயம் காய்ச்சினர். அவர்கள், போலீசாரைக் கண்டதும் தப்பி ஓடினர். ஆனாலும் போலீசார் விரட்டிச் சென்று, அவர்களில் 2 பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரைச் சேர்ந்த மூக்கன் மகன் இசக்கிபாண்டி (வயது 35), பொன்னங்குறிச்சியைச் சேர்ந்த தளவாய் மகன் மாயாண்டி (34) என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

3 பேருக்கு வலைவீச்சு

அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக டிரம்மில் வைத்திருந்த 90 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். மேலும் அங்கு அரை லிட்டர் பாட்டிலில் விஷ வாடையுடன் இருந்த ரசாயனத்தை போலீசார் கைப்பற்றி, ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் தலைமறைவான வெள்ளூரைச் சேர்ந்த சேது, சிவா என்ற ராமலிங்கம், பரமசிவன் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜட்சன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம்

சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மற்றும் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தான்குளம் அருகே பெருமாள்குளம்-மீரான்குளம் இடையே பாப்பன்குளம் காட்டு பகுதியில் சாராயம் காய்ச்சிய 2 பேரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் மீரான்குளத்தை சேர்ந்த தங்கையா மகன் ராஜ்குமார் (28), மூக்காண்டி (48) என்பது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சாராயம் காய்ச்சுவதற்காக பானையில் வைத்து இருந்த சுமார் 4 லிட்டர் சாராய ஊறலையும் போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

Next Story