காய்கறி மூட்டைகள் மீது கிருமிநாசினி தெளிப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் - டாக்டர் கருத்து


காய்கறி மூட்டைகள் மீது கிருமிநாசினி தெளிப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் - டாக்டர் கருத்து
x
தினத்தந்தி 24 April 2020 12:18 PM IST (Updated: 24 April 2020 12:18 PM IST)
t-max-icont-min-icon

காய்கறி மூட்டைகள் மீது கிருமி நாசினி தெளிப்பதால் மக்களுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக டாக்டர் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவையில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக அரசு கட்டிடங்கள், வாகனங்கள், சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதனால் கொரோனா வைரஸ் எங்காவது படிந்திருந்தாலும் அவை அழிந்து விடும்.

இந்த நிலையில் மக்கள் அதிகம் வந்து செல்லும் கலெக்டர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி மற்றும் உழவர் சந்தைகள் ஆகிய இடங்களில் பொது மக்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதற்காக கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. அவை தொடங்கி வைக்கப்பட்ட 2 நாளிலேயே அதை மூடி விட்டார்கள். அதற்கு காரணம் கிருமி நாசினியை மனிதர்கள் மீது தெளிப்பதால் எந்த பலனும் கிடையாது. அது வைரசை கொல்லாது. மாறாக மனிதர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் கிருமி நாசினி சுரங்கபாதையை அகற்ற மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன்பேரில் அவை அகற்றப்பட்டன.

இந்த நிலையில் கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் தற்போது காய்கறி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அந்த கடைகள் செயல்படுகின்றன. அங்கு கடைகள் மூடப்பட்ட பின்னர் பொதுமக்கள் வந்து சென்ற இடங்களில் கிருமி நாசினி அடிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் கடைக்காரர்கள் மறுநாள் விற்பனைக்காக வைத்து விட்டு சென்ற காய்கறி மூட்டைகள் மீதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மக்கள் சாப்பிடும் காய்கறிகளில் கிருமி நாசினி தெளித்தால் அது பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வடஇந்தியாவில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை சாலையில் உட்கார வைத்து அவர்கள் மீது கிருமி நாசினி தெளித்த சம்பவத்துக்கு மனித உரிமை ஆணையம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில் துறைப்பட்டு பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட சில தொழிலாளர்கள் மீது தெளிப்பான் மூடி வழியாக கிருமி நாசினி ஒழுகி தொழிலாளர்களின் முதுகில் வடிந்தது. இதில் அவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்பட்டது. உடலின் மீது பட்டதற்கு பெரிய காயம் ஏற்படுத்திய கிருமிநாசினியால் சாப்பிடும் காய்கறிகள் மீது தெளித்தால் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறியதாவது:-

கொரோனாவை கொல்ல வேண்டும் என்பதற்காக மக்கள் சாப்பிடும் காய்கறிகள் மீதும் கிருமி நாசினி தெளிப்பது எந்த விதத்தில் சரியானது என்று தெரியவில்லை. சோடியம் ஹைப்போ குளோரைடு என்ற வேதிப்பொருள் தான் அதில் கலக்கப்படுகிறது. பூச்சி மருந்து தெளித்த காய்கறிகளையே மக்கள் வாங்குவதில்லை. இந்த நிலையில் கொரோனாவை காரணம் காட்டி காய்கறிகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுவதால் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.மார்க்கெட்டில் இருந்து வாங்கி செல்லும் காய்கறிகளை கழுவி விட்டு தான் மக்கள் பயன்படுத்துகிறார்கள். காலி பிளவர், முட்டைக்கோஸ், வாழைத்தண்டு போன்றவற்றின் மீது கிருமி நாசினியை தெளித்தால் அவற்றை கழுவினாலும் போகாது. எனவே கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி காய்கறி மூட்டைகள் மீது கிருமி நாசினி தெளிப்பதை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.

Next Story