வேலை வாய்ப்பை இழந்ததால் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாக திரண்ட நெசவாளர்கள் - ஆரணியில் பரபரப்பு


வேலை வாய்ப்பை இழந்ததால் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாக திரண்ட நெசவாளர்கள் - ஆரணியில் பரபரப்பு
x
தினத்தந்தி 24 April 2020 12:18 PM IST (Updated: 24 April 2020 12:18 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்ததால் நெசவாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாகக் கூறி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி,

ஆரணி நகரிலும், சுற்று வட்டாரப் பகுதிகளான சேவூர், முனுகப்பட்டு, ஒண்ணு புரம், துருகம், எஸ்.வி.நகரம், மாமண்டுர், வேலப்பாடி, இரும்பேடு, மருசூர், திருமணி, மேல்சீச மங்கலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங் களில் ஏழை எளியோர் அதிகம் ஈடுபட்டு வரும் பிரதான தொழிலாக இருப்பது பட்டு நெசவுத்தொழில் ஆகும். 75 ஆயிரம் நெசவாளர்கள் நெசவுத் தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பட்டு நெசவுத் தொழிலுக்கு மூலப் பொருளான கச்சாப் பட்டு கர்நாடகா மாநிலத்தில் இருந்து வர வேண்டும். அதே போல் பட்டுச்சேலைகளில் முக்கியமாக இடம் பெறும் ஜரிகை சூரத் நகரில் இருந்து வர வேண்டும். தற்போது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்ட நிலையில், எந்தப் பொருட் களும் இறக்குமதி செய்ய முடியாமல் உள்ளனர். ஊரடங்கால் நெசவாளர்கள் அனைவரும் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கின்றனர்.

மேலும் ஆரணி நகரில் கொசப்பாளையம் பாட்சா தெரு, கோபால் தெரு, மருசூரான் தெரு உள்ளிட்ட தெருக்களில் பெரும்பாலும் வசித்து வரும் சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த நெசவாளர்களே அதிகமாக உள்ளனர். அவர்கள், அரசு தங்களுக்கு எந்தவொரு நிவாரணமும், உதவிகளும் செய்யவில்லை எனக் கூறி நேற்று தங்களுடைய குடும் பத்துடன், ஆரணியில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாகக் கூறி ஓரிடத்தில் திரண்டனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்ததும், தனிப்படை போலீஸ் ஏட்டு முருகன் அங்கு விரைந்து வந்தார். அப்போது அவர்கள், நாங்கள் அரசு அறிவித்தபடி சமூக விலகலை கடைப் பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் போராட்டம் நடத்த உள்ளோம் எனத் தெரிவித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீஸ் ஏட்டு, ஊரடங்கு அமலில் இருக்கும்போது, மக்கள் யாரும் போராட்டம் நடத்தக் கூடாது. உங்களின் கோரிக்கை களை மனுவாக எழுதி அமைச்சர், உதவி கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் கொடுங்கள். அவர்கள் உங்களின் மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப் பார்கள். நேரடி போராட் டத்தில் ஈடுபட்டால் கைது செய்வோம், என எச்சரித்தார்.

ஊரடங்கு அமலில் இருக்கும்போது, போராட் டமே நடத்தக்கூடாது எனக் கூறி, சம்பவ இடத்தில் திரண்டவர்களை அவரவர் வீடுகளுக்கு செல்லும்படி திருப்பி அனுப்பி வைத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தை கேள்விப்பட்டதும், அங்கு வந்த ஆரணி நகர கிராம நிர்வாக அலுவலர் ஜெயச் சந்திரன், கோரிக்கை குறித்த மனுவை வருவாய் கோட்டாட்சியரிடமும், தாசில்தாரிடமும் கொடுங்கள் எனக்கூறி அனுப்பி வைத்தார்.

Next Story