சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? தொழிற்சாலைகளில் அமைச்சர் ஷாஜகான் ஆய்வு
தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா? என்று அமைச்சர் ஷாஜகான் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி,
மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து கடந்த 20-ந் தேதி முதல் மாநிலங்களில் தொழிற்சாலைகள் இயக்கலாம் என அனுமதி அளித்தது. அதன்படி புதுச்சேரி அரசு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஊரடங்கில் தளர்வு மேற்கொண்டு, சில கட்டுப்பாடுகளை விதித்து தொழிற்சாலைகள் இயங்கலாம் என அறிவித்திருந்தது.
இந்தநிலையில் வடமங்கலம், திருவண்டார்கோவில் பகுதிகளில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு அமைச்சர் ஷாஜகான் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அவர் முதலில் வடமங்கலத்தில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை, திருவண்டார்கோவிலில் உள்ள தனியார் தொழிற்சாலைகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது தொழிற்சாலை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா?, குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா? சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? தொழிலாளர்களுக்கு முக கவசம், கிருமி நாசினி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா? மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறதா? என்பது பற்றி கேட்டறிந்தார்.
ஆய்வின்போது தொழில்துறை இயக்குனர் பிரியதர்ஷினி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து திருவண்டார்கோவில் பகுதியில் தங்கியுள்ள புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார்.
Related Tags :
Next Story