புதுவை எல்லை பகுதியில் குவியும் தமிழக மக்கள் அதிரடி நடவடிக்கை எடுக்காவிட்டால் கொரோனா பரவும் அபாயம்
புதுவை எல்லை பகுதியில் குவியும் தமிழக மக்களால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.
புதுச்சேரி,
சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி வைரசான கொரோனா உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. வைரசால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் இறந்துள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரசுக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக கடந்த மாதம் 25-ந் தேதி முதல் வருகிற மே மாதம் 3-ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுவை மாநிலத்திலும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. அதுவும் பிற்பகல் ஒரு மணிக்கு மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
கடந்த 20-ந் தேதி முதல் சற்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 100 நாள் வேலைத்திட்டம், கட்டுமான பணிகள் ஆகியவற்றுக்கு அனுமதிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி தரப்பட்டுள்ளது. ஓரிடத்தில் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுவை மாநிலத்துக்குள் நுழையும் தமிழக மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வேளாண் தொழில், கட்டுமான தொழில் ஆகியவற்றுக்கு வருவதாக கூறி எல்லைப் பகுதிகளில் தமிழக மக்களின் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
ஏற்கனவே தமிழக மக்கள் புதுச்சேரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நுழைவு வாயில்களான கோரிமேடு, மதகடிப்பட்டு கனகசெட்டிகுளம், முள்ளோடை வாயில்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு இரவு பகலாக போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே புதுவையையொட்டிய விழுப்புரத்தில் 41 பேரும், கடலூரில் 26 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புதுவை மாநிலத்திற்குள் வந்தால், இங்குள்ள மக்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக தமிழக பகுதிகளில் இருந்து புதுவைக்கு வரும் 82 குறுகிய வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளன. அங்கு போலீசாரும் தன்னார்வலர்களும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் அவர்களது பாதுகாப்பையும் மீறி தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் புதுவைக்கு வருகின்றனர். மருத்துவ சிகிச்சைக்காக வருகிறோம் என்று கூறி புதிதாக வருபவர்கள், தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். சிகிச்சைக்காக வருபவர்களை மனிதாபிமானத்தோடு போலீசார் உள்ளே அனுமதித்து வருகின்றனர். ஆனால் அதையே சிலர் தங்களுக்கு சாதகமாக வைத்துக்கொண்டு, பொய்யான காரணங்களை கூறி புதுவைக்குள் நுழைகின்றனர். இவர்களை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் புதுவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய வரலாற்று ஏற்பாட்டால் புதுவை எல்லைப்பகுதிகளில் மருத்துவக் குழுவும் தயார் நிலையில் உள்ளது. அவர்களுக்கு, உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள் மட்டுமே புதுச்சேரி பகுதிக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை என்று கூறி தேவையில்லாமல் நாள்தோறும் சுமார் 300 பேர் புதுச்சேரி வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக புதுவை கலெக்டர், கடலூர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தேவையில்லாமல் புதுவைக்கு வருபவர்களை கட்டுப்படுத்தவும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அத்தகைய அதிரடி நடவடிக்கை எடுக்காவிட்டால் புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் நிலை உள்ளது.
Related Tags :
Next Story