குடியாத்தம் அருகே, 70 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள், ரொக்கம் திருட்டு - வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்


குடியாத்தம் அருகே, 70 பவுன் நகை, வெள்ளிப்பொருட்கள், ரொக்கம் திருட்டு - வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
x
தினத்தந்தி 24 April 2020 7:01 AM GMT (Updated: 24 April 2020 7:01 AM GMT)

குடியாத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள், ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குடியாத்தம், 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.ஜெயபிரகாஷ். இவருடைய மனைவி கீதாம்பிகை. இவர்கள் குடியாத்தம் ராஜாகோவில் முத்துநகர் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். ஜெயபிரகாஷ் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் ‘லேப் டெக்னீசியன்’ பிரிவில் பயிற்றுனராகப் பணியாற்றி வருகிறார். தற்போது ஊரடங்கால் ஜெயபிரகாஷ் தனது மனைவியோடு சொந்த ஊரான விளாப்பாக்கத்துக்கு கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி சென்றுள்ளார்.

நேற்று கணவன், மனைவி இருவரும் குடியாத்தம் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு அவர்கள் பூட்டியதுபோல் இல்லாமல் வேறொரு பூட்டு தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பூட்டு பூட்டப்படவில்லை. உடனே அதை கழற்றினர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, கதவு மற்றும் பீரோ பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் வைத்திருந்த 70 பவுன் நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ திருடிச் சென்று விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சத்துக்கும்மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் ஜெயபிரகாஷ் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து, கைரேகையை பதிவு செய்தனர். மேலும் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுப்போன வீடு ஒதுக்குப்புறமாக இருந்ததால், திருடர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறுகையில், வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள் விலை உயர்ந்த பொருட்கள், நகைகளை வீட்டுக்குள் வைக்க வேண்டாம், வங்கி லாக்கரில் பத்திரமாக வைக்கலாம், இல்லையேல் உடன் எடுத்துச் செல்லலாம், என்றார்.

Next Story